முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு பேச்சு வேலூர்:முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய 165வது நூலான “என்ன பேசுவது எப்படி பேசுவது” நூலை விஐடி துணை வேந்தர் ஜிவி செல்வம் வெளியிட்டார். வேலூரில் உள்ள கன்னா ஃபீஸ்டா ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறையன்பு பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், “இந்த நூலை அறிமுகம் செய்து பேசிய மதிப்பிற்குரிய செல்வம் வேலூரில் அறிமுக கூட்டத்தை நடத்த வேண்டும் என விரும்பினார். ஐந்தாண்டு முன்பதாக கூட நட்பு எனும் நந்தவனம் புத்தகத்தை அறிமுகப்படுத்திய போது நண்பர்களை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நூல் சிபாரிசு செய்வதற்காக இந்த கூட்டம் நடைபெறவில்லை. இதனுடைய நோக்கமே வேலூரில் இருப்பவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று தான் விழாவை வேலூரில் நடத்தினோம்.
நாம் பேசுகின்ற மொழி என்பது தாயிடம் இருந்து கற்றுக் கொண்டதல்ல பல லட்சம் ஆண்டுகளாக படிப்படியாக விலங்குகளாய் இருந்து, பரிணாம வளர்ச்சியை கற்று முதலில் சத்தம் போட்டு, பிறகு ஓசை எழுப்பி, பிறகு பாடி ஆடி, பிறகு பேச தொடங்கினோம். அந்த பேச்சு என்பது லட்சம் ஆண்டு வரலாறுகளைக் கொண்டது என்பதை உணர்த்துவதற்காக தான் முதல் பகுதியை எழுதினேன்.
ஒவ்வொரு விலங்கும் ஒரு மொழியில் சங்கீத மொழியை பேசிக்கொண்டிருக்கிறது. உணவுக்காக பேசுகிறது, இனவிருத்திக்காக பேசிகிறது, உணர்வுக்காக பேசுகின்ற மனிதன் ஒருவன் தான். ஒவ்வொரு சொல்லும் எவ்வளவு முக்கியம் ஒரு சொல்லால் வாழ்க்கை உயர முடியும். ஒவ்வொரு சொல்லையும் நாம் உன்னிப்பாக உச்சரிக்க வேண்டும்.
அந்த சொல்லை உச்சரிக்கும் பொழுது நாம் அழுத்தமாக உச்சரிக்க வேண்டும். ஒரு மனிதனுடைய வாழ்க்கை மாறப் போகிறது என்ற எண்ணத்தோடு உச்சரிக்க வேண்டும். ஒரே காரணத்திற்காக முதலாவது பக்கத்தில் எப்படி தகவல் தொடர்பு வளர்ப்பது என்பதை விரிவாக எழுதியிருக்கிறேன்.
இந்த நூலின் நோக்கம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இளைஞர்கள் உலக இளைஞர்களின் எந்த விதத்திலும் தாழ்ந்தவர்களில் அல்ல. அறிவிலும் ஆற்றலிலும் உடன் மொழியிலும் வெளிப்படுத்துவதிலும் என்பதை தெளிவுபடுத்துவதற்காக, நான் வாழுகின்ற பகுதியில் இருக்கின்ற இளைஞர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறபோது அதை ஏற்படுத்துகின்ற மகிழ்ச்சியை விட உன்னதமான மகிழ்ச்சி சில பிரதிகள் புத்தகம் விற்பதினால் வரப்போவதில்லை.
என் மீது அன்பு கொண்ட அத்தனை இதயங்களுக்கும், இங்கு வந்திருக்கும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவிப்பதை தவிர வேறு ஏதும் என் கைகளில் இல்லை. ஏனென்றால் நான் எப்பொழுதும் வெறும் கையோடு இருப்பவன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் 3500 வீடுகள், 175 சாலைகள் சேதம்; ஆய்வுக்கு பிறகு தலைமைச் செயலாளர் தகவல்!