வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே கிரின் சர்கிள் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் உரிமையாளராக இருப்பவர் நந்தகுமார். இவரை, நேற்று பிற்பகல், மர்ம நபர்கள் சிலர் அலுவலகத்துக்குள் புகுந்து கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடத்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோவில், மர்ம நபர்கள் நந்தகுமாரிடம் பேச்சுகொடுத்து அவரை அலுவலகத்திற்கு வெளியே அழைத்துச் செல்வது போன்றும், பின்னர் இருசக்கர வாகனத்தில் அவரை வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் செல்வது போன்றும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இது தொடர்பாக நந்தகுமாரின் உறவினர்கள், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து துரிதமாகச் செயல்பட்ட காவல் துறையினர், நந்தகுமாரை மீட்க வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்தனர்.
பின்னர், நந்தகுமாரின் செல்ஃபோன் எண்ணை வைத்து கடத்தல் கும்பலை தீவிரமாகத் தேடினர். இதனையறிந்த கடத்தல் கும்பல், பயத்தில் நந்தகுமாரை ஆற்காட்டில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நந்தகுமார் எதற்காக கடத்தப்பட்டார், கடத்தல் கும்பல் நந்தகுமாரிடம் என்ன மாதிரியான கோரிக்கைகளை முன்வைத்தார்கள் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.