தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா ஊரடங்கு: கால்நடை மருத்துவரின் சேவை! - corona patients

வேலூர்: ஊரடங்கு காலத்தில் கரோனா நோயாளிகளுக்கு உணவு விநியோகம், அவசர ஊர்தி சேவை, உள்ளிட்ட சேவைகளை செய்து வரும் அரசு கால்நடை மருத்துவர் ரவிஷங்கர் உடன் ஒரு சந்திப்பு...

கால்நடை மருத்துவரின் சேவைகள்
கால்நடை மருத்துவரின் சேவைகள்

By

Published : Jun 25, 2021, 12:22 PM IST

வேலூர்: கரோனா தொற்றின் முதல் அலையின் போது நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது ஏழைகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலருக்கும் உதவும் எண்ணத்துடன் தன்னார்வலர்கள் பலர் உதவி புரிந்து வந்தனர். அதேபோல் தற்போது இரண்டாவது அலை ஊரடங்கிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

இவர்களில் ஒருவர் தான் வேலூரைச் சேர்ந்த அரசு கால்நடை மருத்துவர் ரவிஷங்கர். முழு நேர அரசு மருத்துவரான இவர், ஊரடங்கு காலம் மட்டுமின்றி மற்ற நாள்களிலும் சேவை செய்து வருகிறார். இதுதொடர்பாக அவர் கூறியதாகவது,

"2009ஆம் ஆண்டு சொந்தமாக TROY (The Revolution of Youth) என்னும் தொண்டு நிறுவனத்தை தொடங்கினேன். இதன் மூலம் கிராமபுறங்களிலுள்ள குழந்தைகளுக்கு ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் குறைபாட்டினால் ஏற்படக்கூடிய ரத்த சோகையை குறைக்க, அனீமியா எராடிக்கேஷன் திட்டத்தை (Anaemia Eradication Project) குழுவோடு ஆரம்பித்தோம். இதன் மூலம் இந்த குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக மருந்து கொடுத்து வந்தோம். இதேபோல் உடல் நலம் சார்ந்த தொண்டுகளை செய்ய ஆரம்பித்தோம்.

தேடி போய் உதவும் தொண்டு நிறுவனம்:

தேவைகளுக்கு ஏற்றவாறு சமுதாயப் பணி செய்து வருகிறோம். தற்போது இரண்டு வருடங்களாக TROY தொண்டு நிறுவனத்தை, ‘டாக்டர். ரவிஷங்கர் ஃபவுண்டேஷன்’ (Dr. Ravishankar Foundation) என்று பெயர் மாற்றம் செய்து நடத்தி வருகிறோம். கரோனா இரண்டாவது அலையில் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ‘ஆக்சிஜன் பேங்க்’ என்ற பெயரில், ஆக்சிஜன் தேவைபடுபவர்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை இலவசமாக வழங்கி வந்தோம்” என தெரிவித்தார்.

தொடரந்து பேசிய அவர், “கடந்த இரண்டு மாதங்களாக கரோனா பாதிப்பால் வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு இலவசமாக மூன்று வேளை உணவு தயாரித்து, சுமார் 80 குடும்பங்களுக்கு வழங்கி வருகிறோம். அதேபோல் அவசர ஊர்தி தட்டுப்பாடு ஏற்பட்டபோது இலவசமாக அவசர ஊர்தி சேவையை தொடங்கினோம். வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கும், உதவிக்கு ஆட்கள் இல்லாதவர்களுக்கும் மருந்து வாங்கி தருகிறோம். மருந்துக்கான கட்டணத்தை மட்டுமே அவர்களிடத்தில் பெற்றுக்கொள்கிறோம்.

இந்த குறிப்பிட்ட நான்கு சேவைகளை தொடர்சியாக தேவையின் அடிப்படையில் செய்து வருகிறோம். உதவி வேண்டி தினமும் 200 முதல் 300 அழைப்புகள் எங்களுக்கு வருகின்றன. இந்த சேவைகளை திறம்பட செய்து முடிக்க 15 தன்னார்வளர்கள் உள்ளனர். உணவு விநியோகம், அவசர ஊர்தி சேவை, ஆக்சிஜன் செறிவூட்டி விநியோகம், மருந்து பட்டுவாடா என இவர்களை நான்கு குழுக்காளாக பிரித்துள்ளோம். இந்த குழு போதிய கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையுடன் இயங்கி வருகிறது. கடவுளின் உதவியால் தற்போது வரை குழுவில் உள்ள யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை” என்றார் புன்னகையுடன்.

கால்நடை மருத்துவரின் சேவைகள்
உதவ வேண்டும் என்கிற நோக்கம் வந்தது ஏன்?

“அரசு மருத்துவராக 2010ஆம் ஆண்டில் முதலில் ஒரு கிராமத்தில் பணிக்காக சேர்கிறேன். நகரத்திலேயே படித்து, வளர்ந்த எனக்கு கிராமத்தின் அமைப்பு தெரியவில்லை. அங்கு நான் பார்த்த விஷயங்கள் என்னை அதிகம் பாதித்தது. நாம் இங்கு வாழும் வாழ்க்கையும், அவர்கள் அங்கு வாழும் வாழ்க்கையும், அவர்களுக்கு கிடைக்கக்கூடிய தேவைகளும் பெரிதும் வித்தியாசமாக இருந்தன. நான் பணிபுரிந்த மருத்துவமனையின் அருகே தான் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது.

காலணியின்றி அங்கு பயில வரும் குழந்தைகளின் நிலையை அறிந்து, அங்கு வரும் குழந்தைகளுக்கு இலவச காலணிகளை வழங்கினேன். இதிலிருந்து என்னுடைய சேவை தொடங்கியது. மேலும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்காக குடற்புழு நீக்கும் திட்டத்தை (Deworming Programme) முன்னெடுத்து, படிப்படியாக அடுத்தடுத்த சேவைகளை செய்ய தொடங்கினோம்.

எனக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகள் மீது ஈடுபாடு சற்று அதிகம். இதன் காரணமாக நீண்ட நாள்கள் சிந்தித்து பென்னாத்தூர் அருகே என்னுடைய சொந்த செலவில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு சிறப்பு பள்ளியை அமைத்தேன். காலையில் நாங்களே வாகனத்தை வைத்து கிராமப்புரத்திலுள்ள குழந்தைகளை அழைத்து வந்து, இலவச உணவுடன் கூடிய கட்டணமில்லா கல்வியை வழங்கி வருகிறோம்.

கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளியை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது” என வேதனை தெரிவித்தார். மேலும், இந்த சமுதாயத்தில் நாம் பார்க்கக்கூடிய எதையாவது மாற்ற முடியும் என்ற எண்ணம் தான் இதுவரை இந்த சேவைக்கான உந்துதலாக இருந்து வருகிறது என்கிறார்.

நிதி எவ்வாறு திரட்டுகிறீர்கள் ?

“வெளியே இருந்து இந்த சேவைகளை பார்க்கும்போது பெரிதாக தெரியும். ஆனால், இவை அனைத்துமே குறைவாக செலவாகக்கூடியவை தான். இதனால் ஏற்படக்கூடிய மாற்றம் என்பது பெரிதாக இருக்கும். உதாரணத்திற்கு ஒரு இரும்பு சத்து டானிக் 50 ரூபாய் தான். ஆனால், அந்த 50 ரூபாய் என்பது ரத்த சோகையுள்ள குழந்தைகளுக்கு நோயை குணப்படுத்தி, மாற்றத்தை அதிகரிக்கக்கூடியவையாக இருக்கும்.

மாதத்திற்கு 100 டானிக் கொடுத்தாலே 5 ஆயிரம் ரூபாய் தான் செலவாகும். தற்போது பலரும் சமூக வலைதளங்களில் நிதி திரட்டி வருகின்றனர். இது போன்ற முயற்சியில் தற்போது வரை நாங்கள் ஈடுபடவில்லை. எனக்குத் தெரிந்த நண்பர்கள் செய்யக்கூடிய உதவியும், என்னுடைய சொந்த நிதியையும் வைத்து தான் இந்த சேவையை செய்து வருகிறேன்” என்றார்.

தான் செய்து வரும் தொண்டின் பெரும் பகுதியை மருத்துவம் சார்ந்த விஷயங்களுக்கு செய்து வரும் ரவிஷங்கர், 'ஒரு சமுதாயத்தில் மருத்துவ துறையில் நாம் கவனம் செலுத்தினாலே, அந்த சமுதாயம் நல்ல நிலைக்கு செல்லும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details