தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவிருந்த நிலையில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணம் பறிமுதல் அதிகம் நடைபெற்றதைக் காரணம் காட்டி இந்நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது கல்லூரிகளில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் சுமார் 10 லட்சம் ரூபாய் கைப்பற்றினர்.
பின்னர், சில தினங்கள் கழித்து நடைபெற்ற சோதனையில், துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகர் சீனிவாசன் வீடு மற்றும் அவரின் சிமெண்ட் குடோனுக்குள் மூட்டையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பணம் கட்டுக்கட்டாக சிக்கின. அதன் மதிப்பு சுமார் 10 கோடியே 53 லட்சம் ரூபாய் எனத் தகவல்கள் தெரிவித்தன. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, எதிர்க்கட்சிகளை முடக்கும் செயல் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்திருந்தன.
இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்ய தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. சட்டவிதிகளின்படி இப்பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்தது.
இன்று மாலை பரப்புரை ஓய்ந்து நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்அடிப்படையில், வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கள் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.