வேலூர்:வேலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா இன்று (செப். 17) நடைபெறுகிறது. இதனையடுத்து 3ஆயிரம் போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கபட்டுள்ளது.
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.79.70 கோடியில் கட்டப்பட்டுள்ள 1,591 குடியிருப்புகளை இன்று (செப். 17) திறந்து வைத்து பயனாளிகளிடம் ஒப்படைக்கவும், பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை இரவு (செப். 16) ரயில் மூலம் வேலூருக்கு சென்றார்.
முதலமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் 3ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்காக தமிழக அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி வேலூரை அடுத்த மேல்மொணவூரில் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ரூ.142.16 கோடியில் மொத்தம் 3 ஆயிரத்து 510 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் தற்போது கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூரை அடுத்த மேல்மொணவூரிலுள்ள இலங்கைத் தமிழர் முகாமில் நடைபெறுகிறது.
இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று காணொலிக் காட்சி மூலம் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கைத் தமிழர் முகாம்களில் மொத்தம் ரூ.79.70 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 வீடுகளை திறந்து வைக்க உள்ளார். மேலும், மேல்மொணவூர் முகாமில் ரூ.11 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 220 வீடுகளையும் பயனாளிகள் வசம் ஒப்படைக்க உள்ளார்.