வேலூர் மக்களவைத் தேர்தல் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற இருப்பதால் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.
இன்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பொன்முடி வேலூர் சாபர்ணாம்பேடு பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்தால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் இந்தப் பகுதியில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து, பேசிய திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், "இது எனது சொந்தத் தொகுதி. என்னை நீங்கள் வெற்றி பெறச் செய்தால் இப்பகுதியில் நீண்ட நாளாக நிலவிவரும் தண்ணீர் பிரச்னையை சரிசெய்வேன். மேலும் மத்திய அரசிடம் வாதாடி பல்வேறு நலத்திட்டங்களை வாங்கித் தருவேன்" என்று வாக்குறுதி அளித்தார்.
வேலூர் தேர்தல் - திமுக பரப்புரை இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி, அதிமுகவில் எத்தனை அமைச்சர்கள் வந்தாலும் வேலூர் தேர்தலில் வெற்றிபெற முடியாது என ஆரூடம் கூறினார்.
திமுக வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகக் கூறிய பொன்முடி, ஆந்திர அரசு பாலத்தில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி எடுப்போம் என்றார்.