தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பட்டை உரிக்கப்படும் - அமைச்சர் துரைமுருகன் காட்டம்.. - Government Welfare Scheme Assistance Ceremony

Minister Duraimurugan Speech: வேலூர் மாநகராட்சியில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை சரிவர செய்யாமல் உள்ள மாநகராட்சி அதிகாரிகளுக்கு பட்டை உரிக்க உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் காட்டமாகத் தெரிவித்து உள்ளார்.

வேலூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பட்டை உரிக்கப்படும் - அமைச்சர் துரைமுருகன் காட்டம்
வேலூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பட்டை உரிக்கப்படும் - அமைச்சர் துரைமுருகன் காட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 6:19 PM IST

வேலூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பட்டை உரிக்கப்படும் - அமைச்சர் துரைமுருகன் காட்டம்

வேலூர்:அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் இன்று (செப்.5) நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன், சுமார் ஐந்து கோடி மதிப்பில் 660 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா, புதிய குடும்ப அட்டை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட 13 துறைகளின் சார்பில் நல திட்ட உதவிகளை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “பருவமழை காலங்களில், பாலாற்றில் வீணாக செல்லும் தண்ணீரை தடுக்கும் வகையில், பல இடங்களில் தடுப்பணைகளை கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வந்தனர்.

அதன் அடிப்படையில், இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பாலாற்று பகுதியில் காவனூர், டி.கே. புரம், இறைவன் காடு, அரும்பருதி என 7 க்கும் மேற்பட்ட இடங்களில் தரையில் இருந்து 5 அடி உயரத்துக்கு தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு பருவ மழைக் காலங்களில் தண்ணீர் வீணாகாமல் பாலாற்றில் தேக்கி வைக்கப்பட்டு வேளாண் நிலத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தப்படும்.

இதனால் மக்களின் நீண்ட நாட்களாக இருந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது. திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சுமார் 40 இடங்களில் அணைகள் கட்டப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது.

இந்த வழக்கு தொடர்ச்சியாக நாளை உச்ச நீதிமன்றத்தில் வர உள்ளது. அரசு அதிகாரிகள் மக்களுக்காகத் தான் பணி செய்கிறோம் என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும். அலுவலகங்களுக்கு வரும் பொது மக்களை அன்புடன் வரவேற்று, அவர்களின் தேவையை நிவர்த்தி செய்வது தான் அரசு அதிகாரிகளின் கடமையாக இருக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காட்பாடி வட்டாட்சியகம், மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பணிகளில் சிறப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

ஆனால் வேலூர் மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. காரணம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக புனரமைக்கப்படாமல் இருப்பதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். நாளை அவர்களுக்கு பட்டை உரிக்கப்படும்” என்று கூறிய அவர் கடந்த ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களால் தான் இந்த குளறுபடி ஏற்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், வேலூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், விரைவில் காட்பாடி பகுதியில் தொழில்பேட்டை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழில்நுட்ப பூங்கா அமைக்கவும் தேவையான முதல் கட்ட பணிகள் துவங்கி இருப்பதாகவும் கூறினார். “கடந்த 53 ஆண்டுகளாக காட்பாடி சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறேன்.

இதுவரை காட்பாடியில் நூற்றுக்கணக்கான திட்டங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு உள்ளது. குறிப்பாக வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை, காட்பாடியில் நீதிமன்றம், தாலுகா அலுவலகம், சட்டக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பல்வேறு மேம்பாலங்கள், குடிநீர் திட்டங்கள், சாலை சீரமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது” எனவும் தெரிவித்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:ஜெயலலிதா மரண வழக்கில் தீவிரம் காட்டும் நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு புது உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details