வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே உள்ள பத்திரபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுப்புலட்சுமி (வயது 18) என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு திருமணமாகி ஒன்பது மாதங்களே ஆன நிலையில், கணவன் மனைவிக்கிடைய அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று (ஆக. 28) யுவராஜ் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, இருவருக்குமிடைய தகராறு முற்றிய நிலையில், தனது கணவர் யுவராஜை சுப்புலட்சுமி செருப்பால் அடித்தாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ், தன் அருகே இருந்த இரும்பு ஊதாங்குழலால் சுப்புலட்சுமியின்தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் சுப்புலட்சுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
தொடர்ந்து, சுப்புலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு, பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுப்புலட்சுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் யுவராஜை கைது செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றக் காவலில் குடியாத்தம் கிளைச்சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து குடியாத்தம் கோட்டாட்சியர் சேக் மன்சூர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.