‘தங்கத்தால் செய்யப்பட்ட சிறிய மசூதி’ - நகை தொழிலாளி அசத்தல்!
வேலூர்: ரமலான் பண்டிகையை முன்னிட்டு மதநல்லிணக்க அடிப்படையில் தேவன் என்பவர் தங்கம், வெள்ளி ஆகியவற்றைக் கொண்டு பள்ளிவாசலை வடிவமைத்து அசத்தியுள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவன். இவர் கடந்த 30 ஆண்டுகளாக நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தன் தொழிலில் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதன்முதலாக இந்திய வரைபடத்தைத் தங்கத்தால் செய்து, பின்னர் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்றபோது, அதன் நினைவாக கிரிக்கெட் மட்டையைத் தங்கத்தால் செய்து தனது பணியைத் தொடங்கினார்.
பின்னர், அப்துல் கலாமின் தீவிர ரசிகரான இவர், அவர் நினைவாக ராக்கெட் ஒன்றைத் தங்கத்தால் செய்து அவருக்குப் பரிசாக அளித்தபோது அதை அப்துல்கலாம் மறுத்துவிட்ட காரணத்தால் அதை அருங்காட்சியகத்தில் வைத்தனர். இதற்கிடையே, மத ஒற்றுமைக்காகப் பொங்கல் பண்டிகைக்குப் பானை, கரும்பு போன்றவற்றையும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கிறிஸ்துமஸ் குடிலும், ரமலான் பண்டிகைக்கு மசூதி செய்ததாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.