வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நடுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சேகர்(65) என்பவர் பல ஆண்டுகளாக பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு வேலூர் வாணி தெருவைச் சேர்ந்த மகாதேவ் சர்மா(40) என்பவர் சேகரை தொடர்பு கொண்டு தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்யவுள்ளதாகவும், அதற்க்காக 2.75 கோடி ரூபாய் கடனாக வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
கடனை திரும்ப செலுத்தும்போது தனது லாபத்தில் பாதியை தருவதாக ஆசை வார்த்தை கூறியதை நம்பி சேகர் 2.75 கோடி ரூபாயை கடனாக மகாதேவ் சர்மாக்கு வழங்கியுள்ளார். வாக்குறுதி அளித்தபடி மகாதேவ் சர்மா ரியல் எஸ்டேட் செய்யாமல் ஏமாற்றி வந்த நிலையில் தனது பணத்தை திருப்பி தருமாறு சேகர் கேட்டுள்ளார். ஆனால், பணம் திரும்ப வராத நிலையில் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையிடம் சேகர் புகார் மனு அளித்தார்.