தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டதையடுத்து, வேலூர் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காய்கறி, சில்லரை விற்பனைகள், மளிகை, பருப்பு, எண்ணை, நவதானியங்கள், ஹார்டுவேர் கடைகள், ஷோரூம்கள், இதர கடைகள் அனைத்தும் ஏற்கனவே உள்ள நடைமுறைபடி திங்கள், புதன், வெள்ளி ஆகிய வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், உணவகங்கள், பேக்கரிகள், வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை, பார்சல் மட்டுமே வழங்கப்படும். நகர, மாநகரப் பகுதிகளில் உள்ள முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள் அனைத்தும் செயல்பட தடை நீடிக்கிறது.
இதுவரை வேலூர் மாவட்டத்தில் தேநீர் கடைகள், முடிதிருத்தும் நிலையங்கள் திறக்க தடை இருந்தது. தற்போது அதில் தளர்வுகள், அளிக்கப்பட்டு ஊரகப் பகுதிகளில் மட்டும் இவைகள் செயல்பட தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இறைச்சிக் கடைகளும் ஞாயிறு, புதன் ஆகிய இரண்டு தினங்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு திங்கள், புதன், சனி ஆகிய மூன்று தினங்கள் செயல்பட தளர்வு அளிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா எதிரொலி : பருத்தி ஏலம் ரத்து