விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில், இந்து முன்னணி அமைப்பினர், விழா குழுவினர், வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம், எஸ்.பி பிரவேஷ்குமார் உள்ளிடோர் பங்கேற்றனர்.
அப்போது ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசுகையில்,
"கரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் அனைத்து மதம் சார்ந்த விழாக்களுக்கும் தடைவிதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், விநாயகர் சதுர்த்தி விழாவை பொது வெளியில் சிலை வைத்து கொண்டாட தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இதை வேலூர் மாவட்டத்திலும் கடைபிடிக்க உள்ளோம். ஆகவே, நமது குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் எப்படி விழா கொண்டாடாமல் இருப்போமோ, அதை போல கருதி கரோனா வைரஸை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது இடங்களில் சிலை வைத்து தகுந்த இடைவெளியுடன் விழா கொண்டாட அரசு அனுமதியளிக்க வேண்டும் என நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர். இது குறித்து அரசுக்கு தெரியப்படுத்தப்படும் என ஆட்சியர் கூறினார்.
இது குறித்து இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மகேஷ் கூறுகையில், கரோனா பரவல் இருப்பதால் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடக்கூடாது என அரசு தெரிவித்துள்ளது. ஆனால், வேலூர் மாவட்டத்தில் 400 இடங்களில் சிலை வைத்து போதிய பாதுகாப்பு, தகுந்த இடைவெளியுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முடிவு செய்துள்ளோம் என்றார்.