தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக ஆசிரியர் மீது புகார்.. பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு! - மாவட்ட கல்வி அலுவலர் அங்கு லட்சுமி

Complaint against teacher for sexually harassing school girls: வேலூரில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக ஆசிரியர் மீது புகார் கொடுக்கப்பட்டு உள்ள நிலையில், ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பல்வேறு மகளிர் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக ஆசிரியர் மீது புகார் எழுந்துள்ளதையடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர்
பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக ஆசிரியர் மீது புகார் எழுந்துள்ளதையடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 3:23 PM IST

வேலூர்: குடியாத்தம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 1,625 மாணவிகள் படித்து வருகின்றனர். 40 ஆசிரியைகள், 7 ஆசிரியர்கள் என 47 பேர் பணியாற்றி வருகின்றனர். மாணவிகள் 6 ஆம் முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். சுமார் 50க்கும் மேற்பட்ட இருபால ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ராமன் என்பவர் சுமார் 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இவர் அப்பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவிகளிடம் அவ்வப்போது தனியாக அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக பல மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு பயந்து பெற்றோர்களிடம் அறிவியல் ஆசிரியர் ராமன் பாலியல் தொந்தரவு தருவதாக பெற்றோர்களிடம் புகார் அளித்துள்ளனர். இதனை அறிந்த பெற்றோர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அறிவியல் ஆசிரியர் ராமன் மீது புகார் அளித்தனர்.

இதனால் அறிவியல் ஆசிரியர் ராமன் விடுப்பில் சென்று விட்டார். இதனை அறிந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த குடியாத்தம் காவல்துறையினர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து மகளிர் காவல் அதிகாரிகள் மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய மாவட்ட கல்வி அலுவலர் அங்கு லட்சுமி

அப்போது ஆசிரியர் ராமன் சில்மிஷம் செய்ததாக ஏராளமான மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மதியம் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து மாலை வரை போராட்டம் நடைபெற்றதால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் ஆசிரியர் ராமன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் ஆசிரியர் ராமன் மீது கல்வித் துறை சார்பில் பணி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பள்ளியை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும்.

பள்ளியில் உள்ள ஆண் ஆசிரியர்களை மாற்றி விட்டு பெண் ஆசிரியைகள் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் பி.வேதநாயகம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் டி.எம் சஞ்ஜித் ஆகியோர் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக புகார் பெற்று காவல்துறை மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

மாணவிகளின் பெற்றோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டு ஆசிரியர் மீது காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மணிநேரம் நடைபெற்ற போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அங்கு மாவட்ட கல்வி அலுவலர் அங்கு லட்சுமி மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.

விசாரணை முடிந்து செல்லும் போது பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட கல்வி அலுவலர் வாகனத்தை முற்றுகையிட்டனர். பின்னர் மாவட்ட கல்வி அலுவலர் அங்கு லட்சுமி உயர் அதிகாரிகளிடம் பேசி சட்டப்படி ஆசிரியர் ராமன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பின் பெற்றோர்களும், பொதுமக்களும் கலைந்து சென்றனர். இது சம்பந்தமாக குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல் கட்ட நடவடிக்கையாக, ஆசிரியர் ராமனை மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் வேலூர் மாவட்டம் பொன்னை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்தனர். மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் ராமனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பல்வேறு மகளிர் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்து சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:6 ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதம்- என்ன நடக்கிறது காவேரிப்பாக்கத்தில்

ABOUT THE AUTHOR

...view details