தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நானே சொல்கிறேன் இவர் சாதி மதமற்றவர்' - இப்படிக்கு சாதி சான்றிதழ்

வேலூர்: சாதிக்கு அடையாளமாக இருக்கும் சான்றிதழை "சாதி-மதமற்றவர்" என்பதற்கு அடையாளமாக மாற்றும் போராட்டத்தில் வெற்றி கண்டேன் என ம.ஆ.சிநேகா புன்னகையோடு கூறுகிறார்.

By

Published : Feb 13, 2019, 11:39 PM IST

சாதி பெயரை சொல்லி நடக்கும் அநியாயங்கள் காலங்காலமாக தொன்றுதொட்டு நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது உள்ள தொலைக்காட்சி மற்றும் இதர ஊடகங்களால் அதன் கோர முகம் பளிச்சென்று வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், அதே சாதி தொடர்பான இனிமையான செய்தி ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.


'சாதிகள் இல்லை' என்று சொல்லித் தரும் பள்ளிகளில் சேர்வதற்கே சாதி சான்றிதழ்தான் முதலில் கேட்கப்படுகிறது என்று சொல்வார்கள்.
அந்த சாதி சான்றிதழை கிழித்துவிட்டால் சாதி ஒழிந்துவிடும் என்றும் சமூக வலைதளங்களில் சமீபத்தில் பலர், வடிவேலு பாணியில் கருத்து பதிவிட்டு வந்தனர்.



'என் மகளை சாதி குறிப்பிடாமல் பள்ளியில் சேர்த்தேன்' என்று வாய் வார்த்தையாக சொன்ன நடிகர்கள் மத்தியில் உண்மையாகவே சாதிகள் குறிப்பிடாமல் சான்றிதழ் பெற்றுள்ளார் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ம.ஆ.சிநேகா என்பவர்.

இது குறித்து பேசிய அவர், "ஆனந்த கிருஷ்ணன்- மணிமொழி தம்பதியரின் மூத்த மகளாகிய நான், எனது முதல் வகுப்பில் 'என் சாதி என்ன' என்று கேட்ட கேள்விக்கு 'சாதி இல்லை' என்று கூறியதில்தான் துவங்கியது எனது முதல் பிரச்சாரம். அங்கு துவங்கி கல்லூரி, பின்னர் சொந்த வாழ்க்கை என அனைத்திலும் "சாதி மதம் இல்லை" என்றே பிரச்சாரம் செய்தேன்.

என் கணவருக்கும் எனக்கும் நடைபெற்ற திருமணவிழா சாதி,மத சடங்குகள் இல்லாமல் தாலி போன்ற சாதிய அடையாளங்கள் இல்லாமல் புரட்சிகர விழாவாகவே நடைபெற்றது.

எங்களுக்கு ஆதிரை நஸ்ரின், ஆதிலா ஐரீன், ஆரிபா ஜெசி என மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். சாதி சான்றிதழ் சாதிக்கு அடையாளமாக இருப்பது போல், சாதி-மதம் அற்றவர் என்பதற்கும் அடையாளமாக இருக்க வேண்டும் என முடிவு செய்து அதற்காக முயற்சித்தேன்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு, சாதி இல்லை மதம் இல்லை என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை பெற்று வெற்றி பெற்றேன்" என்று புன்னகையோடு கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details