இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன், “2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நாட்டில் ஒரு கலவரத்தை உருவாக்குவதற்காக சதி திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டு வருகிறது. நாட்டின் உயர்ந்த பொறுப்பான பிரதமர் பொறுப்பில் மோடி அமர்ந்துள்ளார். அவருடைய பொறுப்புக்கு உகந்த வகையில் அவருடைய பேச்சும் நடவடிக்கையும் இருக்க வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு:குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டு வரப் போகிறோம் என அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்று. மதம் சார்ந்த நாடு அல்ல இந்தியா. ஒரு மதத்தை மட்டும் சார்ந்தது அல்ல, பல மதங்களை உள்ளடக்கிய நாடு தான் இந்தியா. நம் நாட்டில் 4ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட ஜாதிகளை கொண்ட பல்வேறு வழிபாட்டு முறைகள் பல வேறுபாடுகளை கொண்ட நாடாக திகழ்ந்து வருகிறது.
வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாட்டில் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்த வேண்டுமே ஒழிய மக்களை பிளவுபடுத்தி, அதன் மூலமாக தங்களது குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள கூடாது. இம்மாதிரியான செயல்களை பாரதிய ஜனதா கட்சி, தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இது நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் பேராபத்தை விளைவிக்க கூடியதாகும்” என பாஜக ஆட்சியின் தற்போதைய நடவடிக்கைகளை வன்மையாக சாடினார்.
குஜராத் கலவரம் போல் உருவெடுக்கும் மணிப்பூர் கலவரம்:தொடர்ந்து பேசிய அவர், “எல்லை மாநிலமான மணிப்பூரில் தொடங்கிய கலவரம் இன்றுவரை ஓயவில்லை. 150 க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் இந்த கலவரத்தில் பலியாகி உள்ளன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சொந்த நாட்டில் இருந்து அந்நிய அகதிகளைப் போல் வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்தவும் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தவும் பிரதமர் இது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
வெளிநாட்டில் ஒற்றுமை, அமைதியை பற்றி பேசும் பிரதமர் சொந்த நாட்டில் ஏற்பட்டுள்ள கலவரத்தை ஒடுக்கி அமைதியை ஏற்படுத்த, இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆகவே இது திட்டமிட்டு நடத்தப்படும் கலவரமாக தெரிகிறது. எப்படி குஜராத்தில் இஸ்லாமியர்களை கொன்று, அரசியல் ஆதாயம் தேடினார்களோ அதே போன்ற தற்போது நாடு முழுவதும் கலவரம் மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
இதில் ஒரு பகுதி தான் குடியுரிமை திருத்தச் சட்டம். மக்களைப் பிளவு படுத்தி கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயத்தை நிறைவேற்றிக் கொள்வது மிக மிக தவறான நோக்கமாகும். இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியும் இது போன்ற அருவருக்க செயலை செய்தது கிடையாது.
சனாதனத்தை தழுவும் தமிழ்நாடு ஆளுநர்:தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் பதவி பதவியைத் தவிர்த்து மற்ற அனைத்து பணியையும் செய்து வருகிறார். சனாதனத்தை குறித்து பேசி வருகிறார். அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை செய்யாமல், மேலும் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய உயர்ந்த பட்ச பணியை செய்யாமல், மற்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அமைச்சர் பதவி வழங்குவதற்கான முழு உரிமை முதல்வருக்கு தானே தவிர ஆளுநருக்கு இல்லை.
இதில் ஆளுநர் தலையிட்டு வருகிறார். ஒன்றிய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும். இவர் ஆளுநராக நீடிப்பதற்கு கடுகு அளவு கூட தகுதி அற்றவர். ஆளுநர் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனையும் கலவரத்தையும் உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பொறுப்பற்ற நபர் ஒருவர் ஆளுநராக இருப்பது தமிழ்நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல” எனக் கூறினார்.
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடியின் அறிக்கை:இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார் நடவடிக்கைக்கு, எதிர்ப்பு தெரிவிக்காத திமுக அரசு குறித்தும் அதற்கு கூட்டணி கட்சியின் கண்டனம் தெரிவிக்கப்பட்டது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதலளித்த முத்தரசன், “ எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி எதைப் பேச வேண்டுமோ, அதை தான் பேசி வருகிறார். தமிழக அரசின் ஒப்புதல் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது.
அரசியல் செய்து கொண்டிருக்கலாம் தவிர தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். இதை அறிவிக்கின்ற அமைச்சருக்கும் தெரியும் எதிர்கட்சி தலைவருக்கும் தெரியும், தமிழக மக்களுக்கும் தெரியும், கர்நாடகா மக்களுக்கும் தெரியும், ஒரு போதும் அவ்வாறு அணை கட்டுவது என்பது இயலாது காரியம் என்று. இப்படி ஒரு தவறான முயற்சிகள் குறித்து இந்த நேரத்தில் கர்நாடகா துணை முதலமைச்சர் பொறுப்போடு பேச வேண்டும். அவர் அரசியல் பொறுப்புணர்ந்து பேச வேண்டும்.
அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு மேகதாது அணையை கட்டியே தீர்வேன் என கூறி வருகிறார். அதை எப்படி கட்ட முடியும். அரசியலுக்காக இதுபோன்று பேசி, காலத்தையும் நேரத்தையும் வீணாக்க வேண்டாம். ஒருபோதும் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். அப்படியான முயற்சிகளை மேற்கொண்டால் ஒட்டுமொத்த தமிழகமே இதனை எதிர்த்து நிற்கும். இதில் எடப்பாடியா, ஸ்டாலினா என்பதல்ல பிரச்சனை. தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதை கர்நாடக அரசு மதித்து செயல்பட வேண்டும்” என தன் கண்டனங்களைத் தெரிவித்தார்.
தமிழகமே எதிர்க்கும் மேகதாது அணை:தமிழகத்திற்கான பங்குகளை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்ற கூட்டுறவு சட்ட மசோதா குறித்த கேள்விக்கு, “மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய நடவடிக்கைகளை தான் ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. ஒன்றிய அரசாங்கத்தை பொருத்தமட்டில் அனைத்து அதிகாரமும் தங்கள் கையில் இருக்க வேண்டும் என விரும்புகிறது. இந்த நடவடிக்கை சர்வாதிகார போக்கை வெளிப்படுத்துகிறது.
எதிர்க்கட்சியிடம் முறையாக பேச வேண்டும். நாடாளுமன்றத்தில் ஜனநாயக முறைப்படி விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். மேலும் மெஜாரிட்டி இருக்கும் காரணத்தால், பாரதிய ஜனதா கட்சி எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் முடிவில் இருக்கிறது. இந்த நடைமுறைகளையே சர்வாதிகார அரசாங்கம் பாசிஸ்ட் அரசாங்கம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க:Ajit Pawar : மகாராஷ்டிர துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்பு! இரண்டு துண்டான தேசியவாத காங்கிரஸ்!