வேலூர்: காட்பாடி அடுத்த சேர்காட்டில், தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என மொத்தம் 79 உறுப்பு கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் முதல் பருவத்தேர்வுகள், கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய 2 மாதங்களில் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து, இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது. இதில் சுமார் 3,200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பூஜ்ஜியம் அளவில் மதிப்பெண் வந்ததாகவும், பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வேலூரில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர், இன்று (ஏப்ரல் 18) சேர்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காட்பாடி மற்றும் திருவலம் காவல் துறையினர், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.