வேலூர் கோட்டை சுற்று சாலையில் அமைந்துள்ள மாநில வரித்துறை அலுவலகத்தில், மாநில வரித்துறை இணை ஆணையராக காஞ்சிபுரத்தை சேர்ந்த விமலா (42) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கூடுதலாக நுண்ணறிவுப் பிரிவு, பொது நிர்வாகம் ஆகியவற்றையும் கவனித்து வருகிறார். இவரின் கட்டுப்பாட்டின்கீழ் ஒருங்கிணைந்த வேலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
இந்நிலையில் நேற்று (டிச. 29) வேலூர், திருவண்ணாமலை மாவட்ட உதவி ஆணையர்கள், மாநில வரி அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இதில் சுமார் 50 பேர் வரை பங்கேற்றனர். இப்பயிற்சி முடிவில் புத்தாண்டையொட்டி பணம், பரிசு பொருள்கள் உள்ளிட்டவற்றை இணை ஆணையர் பெறவிருப்பதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.