வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுஜாதாவும் (45), உறவினரான சிவபூஷனமும் (67) நேற்று (ஜூலை 23) காலை வேலூர் மாவட்டம் குடியாதத்திலுள்ள குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்காக சோளிங்கர் பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது சிவப்பு நிற காரில் வந்த ஒருவர் இவர்களிடம் 'எங்கு செல்கிறீர்கள்' எனக் கேட்டுள்ளார். அப்போது சுஜாதா குடியாத்தம் செல்வதாக கூறியுள்ளார். அதற்கு அந்த ஓட்டுநர் 'நானும் குடியாத்தம் செல்கிறேன் காரில் ஏறுங்கள் இருவரையும் அங்கு விட்டுவிடுகிறேன். 150 ரூபாய் கொடுத்தால் போதும்' எனத் தெரிவித்துள்ளார்.
நகை பறிப்பு
இதனை நம்பி சுஜாதாவும், சிவபூஷனமும் காரில் ஏறியுள்ளனர். இதையடுத்து கார் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே சென்றதும், திடீரென காரை மீண்டும் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திரும்பி வேலூர் நோக்கி ஓட்டியுள்ளார்.
இதனால் சுஜாதா, சிவபூசனம் இருவரும் அதிர்ச்சி அடைந்து, “குடியாத்தத்திற்கு செல்லாமல் வேலூர் நோக்கி மீண்டும் செல்கிறீர்கள்” என கேட்டுள்ளனர். அதற்கு ஓட்டுநர் எதுவும் கூறாமல் காரை வேகமாக வேலூர் நோக்கி ஓட்டிவந்துள்ளார்.
பின்னர் திடீரென சிவபூசனம் அணிந்திருந்த செயின், தங்க வளையல்களை மிரட்டி பறித்துள்ளார். மேலும் சுஜாதா அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்றபோது, சுஜாதா அவரிடமிருந்து நகைகளை பாதுகாக்க போராடியுள்ளார். காருக்குள் சிக்கிக்கொண்ட பெண்கள் இருவரும் அலறி கூச்சலிட்டுள்ளனர்.
மேலும் “நீங்கள் அணிந்துள்ள நகைகளை என்னிடம் கழட்டி கொடுத்து விடுங்கள். உங்களை உயிரோடு விட்டு விடுகிறேன். இல்லையென்றால் உங்களை எங்காவது கொண்டு சென்று கொலை செய்து விடுவேன்” என ஓட்டுநர் மிரட்டல் விடுத்துள்ளார்.