வேலூர்: திருவலம் அருகே உள்ள இளையநல்லூர் பகுதியில் மத்திய மின் தொகுப்பு மையம் (பவர் கிரிட்) அமைக்க 2012 ஆம் ஆண்டு விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் துவங்கியது. அப்போது அப்பகுதி விவசாயிகள் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் 2013ஆம் ஆண்டு 50 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு மத்திய மின் தொகுப்பு மையம் அமைக்கப்பட்டது.
இதனையடுத்து விவசாயிகளுக்கு ஒரு சென்ட் நிலத்திற்கு 1,750 ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் அந்த பணம் போதாது என வேலூர் நீதிமன்றத்தில் 19 விவசாயிகள் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் 2019ஆம் ஆண்டு ஒரு சென்ட் நிலத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் என கணக்கிட்டு மூன்று மாதத்திற்குள் வழங்க வேண்டும் என நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அமைக்கப்பட்ட சத்துவாச்சாரி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு பாதிக்கப்பட்ட பணம் வழங்கப்படவில்லை என விவசாயிகள் மேல்முறையீடு செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வட்டியுடன் 3 கோடியே 3 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இல்லையென்றால் வேலூர் மாவட்ட ஆட்சியரின் இரண்டு கார்கள், வருவாய் கோட்டாட்சியர் இரண்டு கார்கள் ஜப்தி செய்ய வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.