சிவ ஆலயங்களில் நடைபெற்ற அன்னாபிஷேகம் வேலூர்:வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாதத்தை முன்னிட்டு அன்னாபிஷேகம் நிகழ்ச்சி நேற்று (அக்.28) நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் உள்ள அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன.
ஸ்ரீ ஜலகண்டீஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு பலவகை காய்கறிகளால் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் சிவனுக்கு வெகு விமரிசையாக அன்னாபிஷேகம் நடைபெற்றது.
மேல்பாடி பொன்னை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சோமநாதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, காலை 6 மணி அளவில் பால் அபிஷேகத்துடன் துவங்கிய அலங்கார பூஜைகள், மாலை 6 மணிக்கு அன்னாபிஷேக அலங்காரத்துடன் நிறைவு பெற்று, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து கோயிலின் அருகில் இருக்கும் ஸ்ரீ தபஸ்கிருதம்பாளுக்கு கத்தரிக்காய், வாழைக்காய், பீட்ரூட், கேரட் உள்ளிட்ட பல்வேறு காய்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் சிவாச்சாரியார்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சோமநாத ஈஸ்வரரை வழிபட்டனர். அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்னாபிஷேகம் விளக்கம்: “சமையல் செய்யும்போது, கெட்ட எண்ணங்களைத் தவிர்த்து, நல்ல எண்ணங்களுடன் சமைக்க வேண்டும். சமையலின்போது, மனதில் எந்த மாதிரியான எண்ணங்கள் ஓடுகிறதோ அது, சமைக்கும் உணவிலும் பிரதிபலிக்கும். அந்த உணவை சாப்பிடுவோருக்கும் அந்த எண்ணங்களின் தாக்கம் பாயும்.
இப்படி நல்ல எண்ணங்களுடன், மந்திரங்கள் சொல்லி சமைக்கப்படும் உணவைத்தான் கோயில்களில் சாமிக்கு படைக்கின்றனர். கோயில் மடப்பள்ளியில் சமைப்பவர் மனதில் எந்தவித வக்ர எண்ணங்களும், சலிப்பும் இன்றி செய்தால் மட்டுமே அதை கடவுள் ஏற்றுக் கொள்வார். இல்லையெனில் கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்” என்று கூறப்படுகிறது. இதற்காகத்தான் அன்னத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில், சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நிகழ்ச்சியை உருவாக்கியதாக நம்பப்படுகிறது.
மேலும், கோயில்களில் கும்பாபிஷேகம் செய்யும் முன்பு, சிலைகளை 'தானிய வாசம்' என்ற பெயரில் தானியங்களில் கிடத்தி வைத்த பின் சிலைகளைப் பிரதிஷ்டை செய்வார்கள். நமக்கெல்லாம் அமுது படைக்கும் ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழாவாக ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பெளர்ணமியன்று கோயில்களில் அன்னாபிஷேகம் கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:காவிரி விவகாரத்தில் அரசியல் ரீதியான தீர்வு சாத்தியமா? - முதலமைச்சர் ஸ்டாலின் பதில் என்ன?