சமூக செயற்பாட்டாளரும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவருமான முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மாயமானார்.
இதனையடுத்து எழும்பூர் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. மேலும், இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதியில் அம்மாநில ரயில்வே காவல் துறையினர் நேற்று இரவு முகிலனை மீட்டனர்.
பின்னர், பலத்த பாதுகாப்புடன் வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டது.
அங்கு, வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன், சிபிசிஐடி அலுவலர்கள் முகிலனிடம் 30 நிமிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதன்பின், துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர், ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகத்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டார்.
காட்பாடியில் முகிலனிடம் காவல் துறையினர் விசாரணை செய்யும் காட்சிகள் அப்போது முகிலன், "தடை செய்...தடை செய்... ஸ்டெர்லைட் ஆலையைத் தடை செய்" என்று ஆக்குரோசத்தோடு முழக்கமிட்டார்.
இதனால் காட்பாடி ரயில்நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இதை அறியாத பயணிகள் என்னவோ ஏதோ என்று வியப்புடன் பார்த்தனர்.
முகிலனுக்கு ஆதரவாக சில இளைஞர்களும் முழக்கமிட்டனர். இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் காவல்துறை வாகனம் மூலம் முகிலன் அழைத்துச் செல்லப்பட்டார்.
வேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு முகிலனை, அங்கிருந்து சென்னைக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்வதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.