வேலூர்: கொணவட்டம் சக்தி நகரைச் சேர்ந்தவர் பத்ருதீன். இவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார். அவரது வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு அவரது வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் மேலும் 60 ஆயிரம் பணம் திருடு போனதாகக் கடந்த திங்கட் கிழமை வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாகக் காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தார். மேலும் பத்ருதீனின் குடும்பச் சூழல் மோசமாக இருந்ததால் அதைக் கருத்தில் கொண்டு இவ்வளவு நகை, பணம் திருடு போயிருக்குமா? என்ற கோணத்திலும் விசாரித்தனர். தொடர் விசாரணையில் முள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (வயது 19), பிரதீப்குமார் (வயது 23) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க:சென்னை விமான நிலைய ஊழியர் கொடூர கொலை - உடலை கூறு போட்டு கடற்கரையில் புதைத்த பெண்மணி கைது!
மேலும், இந்த திருட்டில் சேண்பாக்கத்தைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் தலைமறைவாக உள்ளார். அதனால் போலீசார் அவரை தேடி வருகின்றனர். கைது செய்தவர்களிடம் போலீசார் விசாரித்த போது பத்ருதீன் வீட்டில் நடைபெற்ற திருட்டில் 40 கிராம் வெள்ளிக் கொலுசு, 1 செல்போன், 1 டேப், 1 லேப்டாப் மற்றும் 1 அலெக்சா ஸ்பீக்கர் மட்டும் திருடுபோனது தெரிய வந்தது.
நகை, பணம் உள்ளிட்டவை எதுவும் இல்லை என்று இருவரும் தெரிவித்தனர். திருடப்பட்ட பொருட்களை அவர்களிடம் இருந்து மீட்ட காவல்துறையினர் மீண்டும் பத்ருதீனிடம் விசாரித்த போது நகை, பணம் திருடு போனதாக தவறாகப் புகார் தெரிவித்ததை ஒப்புக் கொண்டார். அவரை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர். பொறியாளர் தன் வீட்டில் நகை, பணம் திருடு போனதாகப் பொய் புகார் அளித்த சம்பவம் கொணவட்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:பழங்குடியின இளைஞர் மது கொலை வழக்கு - 13 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை - சிறப்பு நீதிமன்றம் அதிரடி!