வேலூர் மாவட்டம் கொசப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த ரகுராம், பிரீத்தா தம்பதியின் மகன் ஜஸ்வந்த் (13). இவர், வேலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிப் பருவத்தில் பாடப்புத்தகத்தில் வரும் சம்பவங்களை தனது கல்வி வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பிற்காகவும் மட்டுமே அறிந்து கொள்ளும் சக மாணவர்களுக்கு மத்தியில் பாடப்புத்தகத்தில் அறிந்த விஷயங்களை தனது லட்சிய பயணமாக்கி 1,700 நாணயங்கள், 151 நாடுகளைச் சேர்ந்த பழமையான ரூபாய் நோட்டுகளை சேமித்து சாதனை புரிந்துள்ளார் சிறுவன் ஜஸ்வந்த்.
இவர் ஆறாம் வகுப்பு படிக்கும்போது தமிழ் புத்தகத்தில் நாணயம் தொடர்பான ஒரு பாடத்தைப் படிக்கும்போது, அவருக்கு நாணயம் மீது ஒரு விதமான ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அன்றிலிருந்து நாணயங்கள் சேகரிப்பதை மட்டுமே தனது ஒரே குறிக்கோளாக வைத்துக்கொண்டு பல்வேறு இடங்களில் கிடைக்கும் பழமையான நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை சேகரிக்க தொடங்கியுள்ளார்.
கடைகளுக்குச் செல்லும்போது சில்லரை வாங்குவதிலிருந்து வெளிநாட்டு உறவினர்கள் மூலம் கிடைக்கும் நாணயங்கள் என பல்வேறு விதமான நாணயங்களை அவரது பெற்றோர்கள் உறுதுணையோடு சேகரித்துள்ளார்.
அதேபோல், தனது நண்பர்கள் மூலம் கிடைக்கும் நாணயங்கள் உறவினர்களிடம் கிடைக்கும் நாணயங்கள் என அனைத்து விதமான நாணயங்களையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் குருவி சேர்த்தாற்போல் தனது வீட்டில் சேர்த்து வைத்துள்ளார்.