வேலூர்:கஸ்பா அருகே சர்ச் சாலையில் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கு 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான மாணவிகள் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது. எனினும், அதே பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற மெல்ல கற்கும் மாணவிகளுக்கு மேல் வகுப்புகளில் சேர சேர்க்கை மறுக்கப்படுவதாகவும், வேறு பள்ளியில் படித்து விட்டு வரும் மாணவிகளிடம் அதிகப் படியான கட்டணம் வசூலித்துக் கொண்டு மாணவிகள் சேர்க்கை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அதே பள்ளியில் தொடக்க வகுப்பில் இருந்து படிக்கும் மாணவிகள் சிலருக்கு அடுத்த வகுப்பில் சேருவதற்கு சேர்க்கை அளிக்க மறுக்கப்பட்டதை அடுத்து சுமார் 20 மாணவிகள், அவர்களின் பெற்றோருடன் வந்து கடந்த செவ்வாய்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்து உள்ளனர். இருப்பினும், அதற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் உரிய விளக்கம் ஏது அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து மாணவிகளின் பெற்றோர்கள் கூறுகையில், “முதல் வகுப்பில் இருந்து இதே பள்ளியில் படித்து வரும் மாணவிகள் சரி வர படிப்பதில்லை என கூறி அடுத்த வகுப்பில் சேருவதற்கு சேர்க்கை மறுக்கப்படுகிறது. இதே பள்ளியில் படித்த மாணவிகள் சரி வர படிப்பது இல்லை என்றால் அதற்கு இந்த பள்ளி ஆசிரியர்கள் தான் காரணம். அவ்வாறு சரி வர கற்பிக்காத ஆசிரியர்களை விடுத்து மாணவிகளுக்கு சேர்க்கை மறுப்பதில் நியாயமில்லை.