வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜிஜி ரவி, பிரபல தொழிலதிபர் ஆவர். கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் நாள் அன்று நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள இவர் தோட்டப்பாளையம் சென்றுள்ளார். இந்நிலையில் பிரபல ரவுடி மகா, குப்பன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக ஜிஜி ரவியை கத்தியால் கொலை செய்ய முயன்றனர். அப்போது ரவியின் ஆதாரவாளர்கள் அங்கு வந்த போது, ரவுடி குப்பன் தப்பி ஓடிய நிலையில், மற்றொரு ரவுடி மகாவை அவர்கள் நடுரோட்டில் வைத்து கொலை செய்தனர்.
இந்த கொலை வழக்கில் ஜிஜி.ரவியின் மகன்கள் கோகுல்(29), தமிழ்மணி (24) உறவினர்கள் கார்த்திக் குமார்(22), ரஞ்சித்குமார் (24), சிலம்பரசன் (32), சௌந்தர் என்ற சௌந்தரராஜன் (48), சதீஷ் ஆகிய ஏழு பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி குப்பன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்திய வேலூர் மாவட்ட கூடுதல் விரைவு நீதிபதி சில தினங்களுக்கு முன்பு குப்பனுக்கு மட்டும் ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.