பிரதோஷத்தை முன்னிட்டு ஜலகண்டீஸ்வரர் ஆலய நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் வேலூர்:கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மகாதீபாராதனைகள் காட்டப்பட்டன. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து மலர் மாலைகள், அருகம்புல் மற்றும் வில்வ இலைகளை கொண்டு சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனையும் காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா முழக்கங்களை எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்தது நாள் பிரதோஷ தினம். அதேபோல், சிவனாருக்கு திங்கட்கிழமை மிகவும் விசேஷமான நாள். சோம வாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையில் பிரதோஷம் வந்தால், அன்றைய தினத்தில் சிவ வழிபாடு செய்தால், ஞானமும், யோகமும் கிடைக்கும் என்பார்கள். மேலும் முக்தி நிச்சயமாக கிட்டும் என்று கூறுவார்கள்.
சோம வாரம் என்பது திங்கள் கிழமையை குறிக்கிறது. 16 திங்கள் கிழமைகள் சிவ பார்வதியை நினைத்து விரதமிருந்து பிரார்த்தனை செய்தால் எவ்வளவு பெரிய மன கஷ்டங்களாக இருந்தாலும் அது சுலபமாக நீங்கி விடும் என்பது நம்பிக்கை. சோம வார விரதத்தை மேற்கொள்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த திங்கட் கிழமையிலும் விரதத்தை துவங்கலாம். திங்கட்கிழமை அன்று அதிகாலையில் நீராடி மாலை வரை உண்ணாமல் இருந்து சிவபார்வதி பூஜைகள் மேற்கொள்ள வேண்டும்.
அன்றைய நாளில் சிவபெருமான் பார்வதி தேவியுடன் இணைந்த படத்திற்கு வில்வ அர்ச்சனை செய்து லிங்காஷ்டகம் படிக்கலாம். அல்லது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு உரிய மந்திரங்களை சொல்லலாம். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரத்தை உணவாக எடுத்துக் கொள்ளலாம். பழச்சாறுகள், பால், பழம் போன்றவற்றை உட்கொண்டும் விரதம் மேற்கொள்ளலாம்.
நைவேத்தியமாக பழங்களையும், முடிந்த பாயாசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற ஏதாவது ஒரு நிவேதனத்தையும் சிவபார்வதிக்கு படைக்கலாம். பின்னர் மாலையில் விளக்கேற்றி தூப, தீப ஆரத்தி காண்பித்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். இந்த நாளில் சில விசேஷமான பொருட்களை தானம் வழங்கினால் சிவ பெருமானின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திங்கட்கிழமையில் ஏழை மக்களுக்கு அரிசி தானம், எள்ளு தானம், வெள்ளி சிவலிங்கத்தை கோயிலுக்கு தானம் செய்வது ஆகியவை சிவபெருமானையும் லட்சுமி தேவியையும் மகிழ்விப்பதாக நம்பப்படுகிறது.
இதையும் படிங்க:திரும்பிய பக்கமெல்லாம் மழைநீர்.. குடிநீரின்றி தத்தளிக்கும் பாக்கம் மக்கள்!