வேலூர்: பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வேலூர் மாவட்டத்தில் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் பிறநோயாளிகள் பிரிவு பகுதியில் இருந்து நேற்று (செப் 20) இரவு இடைவிடாமல் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. இதனை அடுத்து அங்குச் சென்ற பொதுமக்கள் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று நாற்காலியில் தனியாக வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
அந்த குழந்தையின் அருகில் யாரும் இல்லாததால் குழந்தையைச் சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகள் மீட்டு மருத்துவமனை பணியாளர்களிடம் ஒப்படைத்தனர். அதன் பின்பு அந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பதை அக்கம் மருத்துவனை முழுவதுமாக மருத்துவமனை பணியாளர்கள் தேடிப் பார்த்துள்ளனர்.
அப்போது பல மணி நேரம் ஆகியும் குழந்தையைத் தேடி யாரும் வராததாலும், குழந்தையின் பெற்றோர் யார் என்பது தெரியாத காரணத்தாலும் அந்த குழந்தையின் பெற்றோர்கள் விட்டு விட்டுச் சென்றதை உணர்ந்த பணியாளர்கள் குழந்தைக்கு முதலுதவி அளித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, அந்த குழந்தையை மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்குப் பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.