வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் காத்தவராயன் இன்று உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் இன்று அவசர ஊர்தி மூலம் அவரது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் கபேரணாம்பட்டு இல்லம் கொண்டுவரப்பட்டது. அங்கு திமுக கட்சி நிர்வாகிகள், குடும்ப உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
குறிப்பாக அவரின் குடும்பத்தினர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். மறைந்த எம்எல்ஏ காத்தவராயனுக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கடைசிவரை மிகவும் எளிமையான முறையில் குடிசை வீட்டிலேயே வாழ்ந்துவந்தார். அதாவது திருமணமாகாத நிலையில் காத்தவராயன் தனது சகோதரர் வீட்டு முன்பு குடில் ஒன்று அமைத்து கடைசிவரை அதில் வாழ்ந்து வந்துள்ளார்.
ஒரே ஒரு அறை மட்டும் கொண்ட அந்தக் குடிசை வீட்டில் தான் படுப்பதற்கு ஒரு கட்டில், ஒரு டேபிள் ஆகியவைதான் அவரது உபகரணம் ஆகும். அதில் கட்சி கடிதங்கள், கரை வேட்டி மட்டுமே வைத்துள்ளார்.