தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10ஆம் வகுப்பு மாணவர் வகுப்பறையில் உயிரிழப்பு.. போலீசார் விசாரணை!

வேலூர் மாவட்டத்தில் இயங்கும் அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவர் திடீர் மூச்சுத் திணறல் காரணமாக வகுப்பறையிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

10ம் வகுப்பு மாணவர் மூச்சுத் திணறி வகுப்பறையில் உயிரிழப்பு
10ம் வகுப்பு மாணவர் மூச்சுத் திணறி வகுப்பறையில் உயிரிழப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 11:33 AM IST

வேலூர்:கே.வி.குப்பம் அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் அமர்ந்து இருந்த பத்தாம் வகுப்பு மாணவர் திடீரென உயிரிழந்ததைத் தொடர்ந்து, பனமடங்கி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காளாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரின் மகன் சூர்யா (வயது 15) பனமடங்கியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் மாணவர் சூர்யா, பள்ளி வகுப்பறையில் நேற்று (ஆகஸ்ட் 22) செவ்வாய்கிழமை அமர்ந்து இருந்த போது, அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து உடனடியாக பள்ளி நிர்வாகம் சார்பில் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்கு உள்ளேயே மாணவர் சூர்யா மூச்சுத் திணறல் அதிகரித்து பள்ளியிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த பனமடங்கி காவல் துறையினர் விரைந்து சென்று மாணவன் சூர்யாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த மாணவர் சூர்யாவுக்கு ஏற்கனவே இருதய பாதிப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இதுதொடர்பாக அவருக்கு 2 முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்ததாகவும், இந்த நிலையில் தான் அவருக்கு பள்ளியில் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பள்ளியில் படித்து கொண்டிருந்த மாணவர் திடீரென மூச்சுத் திணறி இறந்த சம்பவம் பள்ளியிலும், அப்பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:"ஜல் ஜீவன் திட்டத்தால் நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது" - கரூரில் மக்கள் எதிர்ப்பால் திணறும் அதிகாரிகள்!

ABOUT THE AUTHOR

...view details