நடைபெற்று முடிந்து சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், வேலூர் காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ராமு போட்டியிட்டார்.
இதில் காட்பாடி தொகுதியில் முதல் சுற்றில் இருந்து 8ஆவது சுற்று வரை அதிமுக வேட்பாளர் ராமு முன்னிலை வகித்து வந்தார். இதனைத் தொடர்ந்து 9வது சுற்றில் தொடங்கி 20ஆவது சுற்று வரை திமுக வேட்பாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். மேலும் இறுதியாக 22வது சுற்றில் இருந்து 25வது சுற்று வரை அதிமுக வேட்பாளரே முன்னிலை வகித்தார்.
இதற்கிடையில் 1, 2, 11 மற்றும் 18 ஆகிய சுற்றுகளில் மொத்தமாக 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகியதாலும், தபால் வாக்கு மற்றும் நேரடி வாக்குகளை என்னுவதற்கும் தாமதமானதாலும் வாக்கு எண்ணிக்கையில் சிறிது தாமதம் ஏற்பட்டது.
மேலும், பழுதான 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகளையும் எண்ணக் கூறி வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியாக இரவு 9.45 மணிக்கு திமுக வேட்பாளர் துரைமுருகன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த ராமுவை 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக, காட்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியக்கோடி அறிவித்தார்.
தொடர்ந்து அவரது வெற்றிக்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடர்ந்து பத்தாவது முறையாக வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த திமுக வேட்பாளர் துரைமுருகன் இதன் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக வேட்பாளர் துரைமுருகன், "திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றதற்கு முதல் காரணமாக நான் கூறுவது எங்களுடைய கட்சியின் தலைவர் ஸ்டாலின் தான். எத்தனை தொகுதியில் எத்தனை பேர் வெற்றி பெற்றாலும் அத்தனை வெற்றியிலும் அவருடைய பங்குண்டு.
மன்னர் அலெக்சாண்டர் பல நாடுகளை வென்றான் என்றாலும் வென்ற ஒவ்வொரு நாட்டிலும் அவனுடைய பாதம் பற்றிருக்கிறது என்பதைக் கூறும். தேர்தலில் வென்றுள்ள நாங்கள் எல்லாம் ஸ்டாலினுடைய முயற்சியால், அவருடைய ஆதரவால் வெற்றி பெற்று இருக்கிறோம். எனவே, ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் ஒரு புதிய ஆட்சி, ஒரு மறுமலர்ச்சி, ஒரு புதிய சிந்தனை, ஒரு புதிய லட்சியத்தோடு புறப்படப் போகிறது" என்றார்.