வேலூர் மாவட்டம், அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், மக்கள் ஆர்வமாக தங்களின் வாக்கினைப் பதிவு செய்துவந்தனர். பிற்பகல்வரை எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் சுமூகமாக தேர்தல் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பாமக முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இளவழகன் ஆகியோர் அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட கீழ்விஷாரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குச்சாவுக்கு, மாலை 5.30 மணி அளவில் நேரில் சென்றிருந்தனர். அப்போது, அக்கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் அங்கு குவிந்துள்ளனர்.
இந்த கூட்டத்தை கலைந்து செல்லும்படி அங்குப் பணியிலிருந்த காவல் துறையினர் பலமுறை எச்சரித்துள்ளனர். இதனை அவர்கள் ஏற்க மறுத்ததால், திடீரென காவல் துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தை கலைந்து செல்லவைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார், வேலூர் சரக டிஐஜி வனிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து, அங்கு அதிரடிப்படை காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
மேலும், சில இடங்களில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. குறிப்பாக, அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட காட்பாடி அடுத்த எல்.ஜி புதூர் வாக்குச்சாவடியில் முதல் தலைமுறை வாக்காளர்களை வரவேற்பதற்காக, காலை 7 மணி அளவில், வேலூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ராமன் அங்கு சென்றிருந்தார். அந்த சமயம், வாக்குச்சாவடியில் இயந்திரங்கள் பழுதானது. பணியில் இருந்த வாக்குச் சாவடி அலுவலர்கள், தொழில்நுட்ப ஊழியர்களை வரவழைத்து இயந்திரத்தை சரி செய்யும் பணி நடைபெற்றது. இதனால், சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதாக (8.30 மணிக்கு) வாக்குப் பதிவு தொடங்கியது.
அதேபோல், சோளிங்கர் பகுதியில் உள்ள 131-வது வாக்குச்சாவடியில் இயந்திரக் கோளாறு காரணமாக சுமார் 3 மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. இதனால், அங்கு வாக்களித்து வந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தங்களின் வாக்கினைப் பதிவு செய்தனர்.
மாலை 6 மணிவில் வாக்குப்பதிவி நிறைவடைந்த நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் 74.35 விழுக்காடு வாக்குப் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது கடந்த தேர்தலைவிட ஐந்து சதவீதம் குறைவாகும்.
அரக்கோணம் தொகுதியை பொறுத்தவரை மொத்தம் 14 லட்சத்து 79 ஆயிரத்து 761 வாக்காளர்கள் உள்ளனர். 2014 மக்களவைத் தேர்தலின்போது அரக்கோணம் தொகுதியில் 77.85 விழுக்காடு வாக்குப் பதிவாகியிருந்தது. வழக்கத்துக்கு மாறாக இந்த முறை 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் அலுவலர்கள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். இருப்பினும், கடந்த தேர்தலைவிட மூன்று சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றிருப்பது அரசு அலுவலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.