வேலூர்: சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பால் பண்ணையில், உற்பத்தி செய்யப்படும் பால் பாக்கெட்டுகள் மற்றும் விற்பனை செய்யப்படும் பால் பாக்கெட்டுகளுக்கு இடையே தினமும் சுமார் 2 ஆயிரத்து 500 லிட்டர் அளவுக்கு வித்தியாசம் இருப்பதை அறிந்த அதிகாரிகள், இது குறித்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 6ஆம் தேதி ஆவின் பால் பண்ணையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது, ஒரே பதிவெண்ணில் 2 வேன்களை இயக்கி, அதில் தினமும் கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 500 லிட்டர் பால் நுாதன முறையில் திருடிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட வேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அதனை ஆவின் நிறுவன வளாகத்தில் நிறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில், முறைகேட்டில் ஈடுபடுத்தப்பட்ட வேனை கடத்திச் சென்ற வேன் உரிமையாளர், இதை தடுக்க முயன்ற அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்பத்தியது. இது குறித்து சத்துவாச்சாரி காவல் துறையில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆவின் நிறுவனத்தில் பாதுகாப்பு பணியில் மெத்தனமாக இருந்ததாக தனியார் செக்யூரிட்டி நிறுவனத்துக்கு, ஆவின் நிறுவனம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதற்கு உரிய விளக்கத்தை வரும் 12ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக 2 வாகனங்களின் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.