வேலூரில் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் பரவலாக தொடர் மழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் தேங்கிச் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. அப்போது இருந்தே குடியாத்தம், திருப்பத்தூர், அரக்கோணம், லத்தேரி உள்பட வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் ஆங்காங்கே உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் டெங்கு உறுதி செய்யப்பட்ட பிறகு வேலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாள்தோறும் டெங்குவால் பாதிக்கப்பட்ட பலர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு படையெடுத்து வரும் நிலையில், தற்போது வரை வேலூர் மாவட்டத்தில் 792 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கடந்த எட்டு நாட்களில் வேலூர் மாவட்டத்தில் 547 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.