நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த ஆண்டி வலசை சேர்ந்தவர் கந்தசாமி (50). கணவரைப் பிரிந்து வாழும் இவரது மகள் வெள்ளையம்மாள் (21) கந்தசாமியின் வீட்டில் வசித்துவந்தார். இதற்கிடையே நாமக்கல் அருகே உள்ள கொசவம்பட்டி பகுதியைச் சேர்ந்த குறி சொல்லும் நபரான முத்து (25) என்பவர் அடிக்கடி வெள்ளையம்மாளின் உறவினர் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது முத்துவுக்கும் வெள்ளையம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்தப் பழக்கம் காதலாக மாறி திருமணம் செய்துகொள்வதாகக் கூறி முத்து வெள்ளையம்மாளை அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளார். மேலும், முத்து குடும்பத்தில் கஷ்டம் இருப்பதாகக்கூறி ஏழரை பவுன் நகை 1.5 லட்ச ரூபாய் பணத்தை வெள்ளையம்மாளிடம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் வெள்ளையம்மாள் முத்துவிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்திவந்துள்ளார். இருப்பினும் காலம் கடத்திவந்த முத்து திருமணத்தை தள்ளிப் போட்டு வந்துள்ளார்.
திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தான் கொடுத்த பணம், நகை உள்ளிட்டவற்றை திரும்பி அளிக்கும்படி வெள்ளையம்மாள் தகராறு செய்துள்ளார். இதன்காரணமாக திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி திருச்சியை அடுத்த மணச்சநல்லூர் அருகிலுள்ள துறையூர் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு வெள்ளையம்மாளை அழைத்துச்சென்ற முத்து திருமணம் செய்துகொள்ள முடியாது என மறுத்துள்ளார்.
கொலைசெய்யப்பட்ட வெள்ளையம்மாள் இதில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே முத்து தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து வெள்ளையம்மாளின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வெள்ளையம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதன்பின் கொள்ளிடம் ஆற்றங்கரை ஓரத்திலேயே வெள்ளையம்மாளின் உடலை குழிதோண்டி முத்து புதைத்துவிட்டு திருச்செங்கோடு வந்துள்ளார்.
இதனிடையே கடந்த 12ஆம் தேதி மகள் காணாமல்போனதை அறிந்த கந்தசாமி திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வெள்ளையம்மாள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் முத்து நேற்று முன்தினம் (13ஆம் தேதி) வெள்ளையம்மாளை கொலை செய்தை ஒப்புக்கொண்டு திருச்செங்கோடு வட்டாட்சியர் கதிரவேலுவிடம் சரணடைந்தார். சரணடைந்த முத்துவை கதிர்வேலு திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த ஊரக காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் முத்துவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். அதன்பின் திருச்செங்கோடு ஊரக காவல் துறையினர் வாத்தலை காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதனடிப்படையில் அங்கு சென்ற வாத்தாலை காவல் துறையினர் வெள்ளையம்மாள் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து அவரது சடலத்தை தோண்டி எடுத்தனர். பின்னர் உடற்கூறாய்வு செய்யப்பட்டு வெள்ளையம்மாளின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: பெரியாரை தைரியமாக விமர்சித்தவர் சோ - ரஜினி புகழாரம்