உண்மையான வயது 41, ஆதாரில் வயது 123 : ஆட்சியர் அலுவலகத்தில் பெண்மணி மனு திருச்சி: திருச்சி மாவட்டம், தாயனூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர், கவிதா(41). இவர் 1982ஆம் ஆண்டு பிறந்துள்ளார். ஆதார் அட்டை எடுக்கும்போது கவிதாவின் பிறந்த ஆண்டு 1982 என்பதற்குப் பதிலாக 1900 என தவறுதலாக அச்சிட்டு வழங்கியுள்ளனர். இதனால், ஆதார் அடையாளப்படி அந்த பெண்மணிக்கு தற்போது 123 வயது.
பிறந்த ஆண்டு தவறாக அச்சிடப்பட்டுள்ளதால், அவர் அரசின் எந்த சலுகைகளையும் பெற முடியாத நிலையில் உள்ளார். அரசின் எந்த திட்டங்களுக்கும் ஆதார் அட்டையைப் பயன்படுத்த முடியவில்லை. ஆதார் பிரதான அடையாளமாக இருக்கும் நிலையில், தவறான பிறந்த ஆண்டு உள்ளதால், அதிகாரிகள் கவிதாவின் ஆதாரை ஏற்பதில்லை எனத் தெரிகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டை மாற்றுவதற்காக கவிதா முயற்சித்தும் முடியவில்லை.
இந்த நிலையில், ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டை மாற்றித் தரக்கோரி கவிதா இன்று(பிப்.27) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். ஆதார் அட்டையில் உள்ள பிறந்த ஆண்டை மாற்றுவதற்காக பல ஆண்டுகளாக முயற்சித்து வருவதாகவும், பிறப்புச்சான்றிதழ் மற்றும் கல்விச்சான்றிதழ் இல்லை எனக்கூறி அலுவலர்கள் பிறந்த ஆண்டை மாற்றித்தர மறுக்கிறார்கள் என்றும் கவிதா தெரிவித்தார்.
தன்னிடம் வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே உள்ள நிலையில், அதை வைத்து பிறந்த ஆண்டை மாற்ற முடியாது என அரசு அதிகாரிகள் கூறுவதாகவும், இதனால் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மணப்பாறை பொன்னர் சங்கர் மாசி விழாவின் கிளி வேட்டை - ஏராளமானோர் பங்கேற்பு