தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர் சந்திப்பு திருச்சி:UPVC ஜன்னல் மற்றும் கதவுகள் தயாரிப்பு மற்றும் விற்பனை பணியில் ஈடுபட்டு வருபவர்கள் ஒருங்கிணைந்து, தமிழ்நாடு UPVC ஜன்னல் மற்றும் கதவுகள் தயாரிப்பாளர் சங்கம் என்ற பெயரில் புதிய சங்க தொடக்க விழா, இன்று (ஏப்ரல் 23) திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில், சங்கத்தின் தலைவர் ராஜேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அமைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் அதன் பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த விக்கிரமராஜா, “தமிழ்நாடு அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலைத் திட்டத்தினை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு ஆதரித்து நன்றி தெரிவிக்கிறது. இதன் மூலம் வடமாநில மக்களுக்கு இணையாக, தமிழ்நாட்டு மக்களும் உழைப்பார்கள்.
உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் என்பது, வியாபாரிகளை நசுக்குவதாக உள்ளது. வணிகத் துறையை காக்கும் வகையில் அரசு சட்டங்கள் இயற்ற வேண்டும். மேலும், கலப்படத்தில் ஈடுபடுபவர்கள் மீது உச்சபட்ச தண்டனையை அரசு வழங்கினால் இயக்க தயாராக இருக்கிறோம். ஆனால், உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுப்பதை ஏற்க முடியாது.
எம்ஆர்பி விலைக்கு குறைவாக விற்பனை செய்து அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக, சாமானிய வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் அத்துமீறல் இல்லாமல், சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மணி நேரம் தங்கு தடை இன்றி கடைகள் இயங்க வணிகர் சங்க பேரமைப்பு வழிவகை செய்யும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:12 மணி நேர வேலை மசோதா - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடும் கண்டனம்!