தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எந்த கடைகளுக்கும் சீல் வைக்கக் கூடாது - விக்கிரமராஜா

திருச்சி: சரவணா ஸ்டோர்ஸ் போல் வேறு எந்த கடைக்கும் சீல் வைக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளக் கூடாது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா
வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா

By

Published : Mar 19, 2020, 9:37 AM IST

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா திருச்சி அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்;

உலகம் முழுவதும் கோவிட்-19 வைரஸ் பரவிவருகிறது. இதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியது.

திரையரங்கம், மால்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வர்த்தக நிறுவனங்களை மூட வேண்டும் என்பது ஏற்க கூடியது. ஆனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி, பால் உள்ளிட்ட பொருள்களை சில்லறை விற்பனை செய்யும் கடைகளை பூட்ட கட்டாயப்படுத்துவது சரியல்ல. மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கவில்லை என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். அதனால் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட வேண்டிய வர்த்தக நிறுவனங்கள் எவை? என்பதை மாநில அரசு முறைப்படுத்தி அறிவிக்க வேண்டும்.

அந்தந்த மாவட்ட அளவில் ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் இதை முடிவு செய்யக்கூடாது. கோவிட்-19 ஒழிப்பு நடவடிக்கைக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். மார்ச் 31ஆம் தேதி வரை வர்த்தகர்கள் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகளை முன்தேதியிட்டு வழங்கியுள்ளார்கள். தற்போது வர்த்தக நிறுவனங்கள் 31ம் தேதி வரை மூடப்படுவதால் வங்கிகளில் அத்தகைய காசோலைகளை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவிடவேண்டும்.

வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா

வருமான வரி செலுத்துவதற்கான கடைசி நாளான மார்ச் 31-ஆம் தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும். ஜிஎஸ்டி.க்கு கால அவகாசம் வழங்க வேண்டும். அதே போல் மத்திய, மாநில அரசுகளுக்கு வரி, உள்ளாட்சி கடைகளின் வாடகை போன்றவற்றை செலுத்தாததால் நடவடிக்கை எடுக்கக் கூடாது. அனைத்துக் கடைகளையும் மூட வற்புறுத்துவதால் அடுத்த 15 நாள்களுக்கு தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களுக்கு அன்றாட அத்தியாவசிய பொருள்களை யார் வழங்குவது என்ற கேள்விக்குறி எழுகிறது.

காய்கறி கடைகளை மூடினால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் விளைவிக்கும் காய்கறிகளை வியாபாரிகள் தான் விற்பனை செய்கின்றனர். சில இடங்களில் திடீரென்று கடையை மூடும்படி அலுவலர்கள் வற்புறுத்துகின்றனர். வியாபாரிகளை அச்சுறுத்தி துன்புறுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். எந்தெந்த கடைகள் அடைக்க வேண்டும், எந்தெந்த கடைகள் அடைக்கவேண்டாம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். குறிப்பாக சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கடையில் காலையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென அங்கு சென்ற அலுவலர்கள் கடையை மூடும்படி வற்புறுத்தி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து கடை ஊழியர்கள் கடையை அடைத்துவிட்டு, அந்த கடையில் உள்ள காய்கறிகளை விற்பனை செய்வதற்காக சிறிது நேரம் கழித்து கடையை திறந்து விற்பனை செய்துள்ளனர். அப்போது மீண்டும் அங்கு சென்ற அலுவலர்கள் கடையை மூடி சீல் வைத்துள்ளனர். இத்தகைய நடவடிக்கையை எங்கும் எடுக்கக்கூடாது. சீல் வைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். அவ்வாறு சீல் வைத்தால் மாநகராட்சி ஆணையரை சந்தித்து தான் கடையை திறக்க முடியும். இதுதொடர்பாக முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சர், சுகாதாரத்துறை ஆகியோரை சந்திக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

இதையும் படிங்க:வெங்கையா நாயுடுக்கு தெர்மல் ஸ்கேன் சோதனை!

ABOUT THE AUTHOR

...view details