திருச்சி:பள்ளி நாட்களிலும் சரி, காதல், திருமண பந்த உறவுகளிலும் சரி மாங்காய், மாம்பழம் ஆகியவற்றை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
அதிலும், மாங்காயின் ஓரப்பகுதியில், ஒரு கீற்றெடுத்து, அதனை உப்பும் மிளகாய்த்தூளும் கலந்த பொடியில் தொட்டு சப்புக் கொட்டிக்கொண்டே சாப்பிடும் பழக்கம் தற்பொழுதும் நம்மிடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதுவே பழமாக மாறினால், மதிய வேளை சோற்றிற்கு அப்படியே மாம்பழத்தை வெஞ்சனமாக சாப்பிடும் பழக்கமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இப்படிப்பட்ட ‘மாம்பழம்’ என்கிற பெயரை கூறியதும், அனைவருக்கும் சேலம் மட்டுமே நினைவிற்கு வரும். ஆனால், காவிரி ஆற்றுப்படுகையில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே திருச்சி என்ற ஊரின் பெயர் நினைவிற்கு வரும். அதிலும் குறிப்பாக, மாம்பழச்சாலை என்ற பெயர் தான், தங்களது சுவையில் ஊறத் தொடங்கும்.
ஏனென்றால், இங்குள்ள மலைக்கோட்டை மாம்பழத்தின் சுவைக்கு, திருச்சியைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் கடும் கெடுபிடியாக உள்ளது.
அதிலும், தாத்தாச்சாரியார் தோட்ட மாம்பழக்கடை என்றால் திருச்சியைச் சார்ந்தவர்களுக்கு திருவிழா தான். இந்த சந்தைக்கு வரும் மாம்பழங்கள், சில்லறை மற்றும் மொத்த விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
20 நாட்கள் மட்டுமே கிடைக்கும் அதிசய மாங்காய் - ஆச்சர்யங்கள் மிகுந்த தாத்தாச்சாரியார் தோட்டம்! இதுகுறித்து காவிரி ஆற்றின் கரையில் இயற்கையோடு இயற்கையாக மாம்பழ விளைச்சல் செய்து கொண்டிருக்கும் கோவிந்தன் தோப்பு உரிமையாளர் பாலு கூறுகையில், “சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கத்திற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது, மாம்பழச்சாலை. அதுவும் காவிரிக்கரையில் உள்ள தோட்டங்களில் விளையும் மாம்பழத்திற்கு எப்போதும் தனிச்சுவைதான். அந்த வகையில், இந்தத் தாத்தாச்சாரியார் தோட்டங்களில் விளையும் மாம்பழங்களுக்கு என தனிச்சுவை உள்ளது” என்றார்.
இதனைத் தொடர்ந்து மாம்பழச்சாலையில் கடை வைத்திருக்கும் சதீஸ்குமார், “பச்சரிசிக்காய் என்ற மாம்பழ வகையில், காயைப் பழுக்க வைக்க வேண்டாம். அப்படியே சாப்பிடலாம். ஆப்பிள் மாதிரி அருமையாக இருக்கும். ஆனால், வருடத்தில் 20 நாட்கள் மட்டுமே இந்த பச்சரிக்காய் கிடைக்கும்.
அதை வழக்கமான வாடிக்கையாளர்களுக்கே கொடுப்பதற்கு சரியாக இருக்கும். உண்மையிலேயே இதன் சுவையில் ஆப்பிள் தோற்றுவிடும். அப்படி ஒரு மென்மை மணம். திகட்டும் இனிப்பும் இருக்கிறது” எனக் கூறினார்.
இதையும் படிங்க:குறைந்தது தக்காளி விலை!