தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல், 18 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு, அனைத்துக் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் திடலில் நேற்றிரவு (ஏப்.10) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், நமது தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது, ஸ்டாலின் குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு இரவு நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்குமாறு அவரது கையை பிடித்து கெஞ்சினார்.
ஆனால், முதலமைச்சர் உடனடியாக சம்மதம் தெரிவிக்காமல் பார்க்கலாம் என்று சொன்னார். சிறிது நேரத்தில் இடம் மறுக்கப்பட்டது என்று செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விடிய விடிய விசாரணை நடந்து, இறுதியில் திமுக தலைவர் கருணாநிதிக்கு வெற்றி கிடைத்தது. மரணத்தின் தருவாயிலும் அவர் போராடி வெற்றி பெற்றார். இப்படி ஒரு இரக்கமற்ற அரசு தமிழ்நாட்டில் உள்ளது.
இதற்காக நாம் அவர்களை பழிவாங்க வேண்டும். அதற்கான நாள்தான் ஏப்ரல் 18. அன்றைய தினம் நடக்கும் வாக்குப்பதிவில் திமுகவுக்கும், கூட்டணி கட்சிக்கும் வாக்களிக்க வேண்டும். கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர மறுத்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு உள்ளது. இருவரும் கூட்டுக் களவாணிகள். அதனால் மக்களவைத் தேர்தலிலும், இடைத்தேர்தல்களிலும் அவர்களை வீழ்த்த வேண்டும் என்றார்.
கருணாநிதி சமாதி விவகாரம் குறித்து பேசியபோது, உதயநிதி கண்கலங்கினார். அவர் கண் கலங்கியதைக் கண்டு அங்கு கூடியிருந்த திமுக மகளிர் அணியினரும் கண் கலங்கினர்.
கருணாநிதியை நினைத்து கண்கலங்கிய உதயநிதி