திருச்சி: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனது நெற்கதிர் அறுவடை இயந்திரத்தை, மணப்பாறை அடுத்த பாலக்குறிச்சியில் தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் முன்பு நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் சென்ற ஆகஸ்ட் 13ஆம் தேதி இரவு நெற்கதிர் அறுவடை இயந்திரம் காணாமல் போனதைக் கண்டு வெங்கடேசன் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து, இவர் காணாமல்போன இயந்திரத்தைக் கண்டுபிடித்துத் தரக்கோரி, வளநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருடப்பட்ட இயந்திரம் மீட்பு
புகாரின்பேரில் மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜனனிபிரியா தலைமையிலான தனிப்படையினர், இயந்திரத்தைத் திருடிச் சென்றவர்களைத் தீவிரமாகத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து திருட்டில் ஈடுபட்ட அரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன், சின்ராஜ் ஆகிய இருவர் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு, அவர்களிடமிருந்து நெற்கதிர் அறுவடை இயந்திரம் மீட்கப்பட்டது.
இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மி: துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை முயற்சி