திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த திண்ணியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் பன்னீர்செல்வத்தின் சகோதரர்களான ரவி, ராமகிருஷ்ணன், இளங்கோவன் ஆகிய மூவரும் சேர்ந்து சுதாகரின் அண்ணனான சுரேஷை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
இதற்கு பழி வாங்கும் வகையில் சுதாகர், 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பன்னீர்செல்வத்தின் தாய் செல்லம்மாள், அத்தை அமராவதி, உறவினர் சதீஷ் ஆகிய மூவரையும் அரிவாளால் வெட்டினார். இதில் செல்லம்மாள், அமராவதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சதீஷ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.