திருச்சி:சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் திருச்சிக்கு விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. விமானத்தில் வரும் பயணி ஒருவர் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் விமான நிலையம் முழுவதும் அதிகாரிகள் அதிரடியாக பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் பயணி ஒருவரை சோதனை செய்த போது செருப்பில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 209 கிராம் ஆகும் என அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவர் காலணியில் வைத்து தங்கம் கடத்தி வந்த நோக்கம் என்ன? அவரது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா? வேறு வழக்குகள் இவர் மீது எதுவும் நிலுவையில் உள்ளதா? இவர் எத்தனை முறை விமானத்தில் வெளிநாடு சென்று வந்துள்ளார் என அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல், வெளிநாட்டு கரன்சிகள், பறவைகள், பாம்புகள் உயிரினங்கள் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டாலும், பயணிகள் "குருவி" என்ற போர்வையில் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வரும் சம்பவம் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
ஆகவே கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவர்கள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கையாக உள்ளது
இதையும் படிங்க: வெண்டைக்காயை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்.. காவல்துறை மற்றும் விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு..