திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கரூர் மக்களவை தொகுதியின் அ.ம.மு.க வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், இரட்டை இலையில் போட்டியிடும் அண்ணன் தம்பிதுரை அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் சீரும் சிறப்போடும் வரவேற்பதை பார்க்கிறோம் என்று கேலி செய்தார். தொகுதி பக்கம் வந்தாலும் தொகுதிக்கு எதுவும் செய்யாதவர் தம்பிதுரை என்றும் சாடினார்.
காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்றும், ஏற்கனவே ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் தமிழ்நாட்டை புறக்கணித்து வஞ்சித்ததாகவும் குறிப்பிடார்.
திமுக அதையும் தாண்டி தமிழ்நாட்டு மக்களின் நலன்களை எல்லாம் மறந்து, தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நன்றாக இருந்தால் போதும் என்று மத்தியில் 15 ஆண்டுகளாக அமைச்சர் பதவியில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள் என்றும் கேள்வியெழுப்பினார். அதனால் தான் 2011-14 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் அவர்களை தோல்வி அடையச் செய்தார்கள் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பாரத பிரதமராக யார் வரவேண்டும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், தேசியக் கட்சிகளை நம்பி நமக்கு பயனில்லை எனவும் கூறினார்.
கிராமப்புற மக்கள் பயனடையும் வகையில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் அம்மா கிராமப்புற வங்கி தொடங்கப்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். கிராமப்புறங்களில் பெண்களை உள்ளடக்கிய குழுக்களை அமைத்து சமையல் எண்ணெய் தயாரிப்பு போன்ற விவசாயம் சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்று அவர் உறுதியளித்தார். நகர்புறங்களைப் போல கிராமப் பகுதிகளிலும் அம்மா உணவகம் திறக்கப்படும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.