தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கக் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு மாநில தலைவர் தங்கராஜ் தலைமை ஏற்றார்.
அதன்பிறகு பேசிய அவர், அரசு கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களை கருத்தில் கொண்டும், மாணவர்களின் நலன் கருதியும் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது போல் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பொது டிஆர்பிக்கு முன்பாக கௌரவ விரிவுரையாளர்களுக்கான சிறப்பு டிஆர்பியை நடத்திட வேண்டும்.
இதற்கான போட்டித் தேர்வை நடத்தி தேர்வு செய்ய வேண்டும். இந்தக் கல்வியாண்டின் முதல் சுழற்சியில் 2,653 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றப்பட்டனர்.
ஆனால் 2,120 பேருக்கு மட்டுமே ஊதியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், 533 பேர் பணி இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு கல்லூரிகளில் பணியாற்றும் யுஜிசி தகுதி பெற்ற முதல் மற்றும் இரண்டாம் சுழற்சி கௌரவ விரிவுரையாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி மாதம் 57 ஆயிரத்து 700 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் விரிவுரையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.