திருச்சி:இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருது பத்மஸ்ரீ. இந்த ஆண்டுக்கான விருதுகள் பெறும் பட்டியலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. அந்தப் பட்டியலில் திருச்சியைச் சேர்ந்த தாமோதரன் என்பவரும் உள்ளார்.
இந்நிலையில் தாமோதரன் மக்களிடையே கழிப்பிட வசதிகளைப் பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு அவர்களுக்காக லட்சக்கணக்கில் கழிவறைகளை கட்டிக்கொடுத்தும் உள்ளார்.
கடந்த 1987ஆம் ஆண்டு கிராமாலயா என்ற அரசு சாரா நிறுவனத்தை தாமோதரன் நிறுவினார். அன்றிலிருந்து இன்றுவரை, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் உள்ளிட்ட ஐந்து தென் மாநிலங்களில் உள்ள 1,000 கிராமங்கள் மற்றும் பல நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு WASH (Water, Sanitation and Hygiene) தொடர்பான வழிமுறைகளை வழங்குவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். தற்போது அவருக்கு 56 வயதாகிறது.
அதிக எண்ணிக்கையிலான கழிவறைகள்
தாமோதரன் மற்றும் அவரது தன்னார்வத் தொண்டர்கள் கடந்த முப்பதாண்டுகளில் சுமார் 6 லட்சம் தனிநபர் இல்லக் கழிப்பறைகளையும் 500 பள்ளிக் கழிப்பறைகளையும் கட்டிக்கொடுத்துள்ளனர். கிராமாலயா மூலம் கட்டப்பட்ட சுகாதார வசதிகள் தென் மாநிலங்களில் உள்ள 30 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் தூய்மைப் பழக்கத்தை மாற்றியுள்ளதாக பெருமையுடன் தெரிவிக்கிறார்.
திருச்சி மாநகர முனிசிபெல் கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட கல்மந்தையில் கடந்த 2002இல் தொடங்கிய இப்பணி இந்தியாவின் முதல் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத சேரியாக அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, 2003ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள 62 வீடுகளைக் கொண்ட தாண்டவம்பட்டி என்ற கிராமம், இந்தியாவின் முதல் குடிசை கிராமமாக அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு மைல்கல்லும் தாமோதரனின் தொண்டு நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக இருந்தது.