திருச்சி: லால்குடி மங்கமாள்புரத்தை சேர்ந்தவர், ஜானகி. இவருக்குத் தகாத உறவு இருந்துள்ளது. இதனால் கர்ப்பமான ஜானகிக்குப் பெண் குழந்தையும் பிறந்துள்ளது. தகாத உறவில் குழந்தை பிறந்ததை அவமானமாகக் கருதிய ஜானகி, வழக்கறிஞர் பிரபு என்பவரைக் குழந்தையை விற்பதற்கு அணுகியுள்ளார். இதனையடுத்து 3.50 லட்சம் ரூபாய்க்குப் பிரபு குழந்தையை விற்றுள்ளார்.
ஆனால் இதில் 80,000 ரூபாய் மட்டுமே ஜானகிக்குப் பிரபு கொடுத்துள்ளார். இதனால் குழந்தையைக் காணவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் ஜானகி மனுத் தாக்கல் செய்தார். ஆனால், வழக்கின் விசாரணையில் குழந்தை விற்கப்பட்டதை நீதிபதி உணர்ந்தார். இதனையடுத்து விசாரணை முடுக்கி விடப்பட்ட நிலையில், ஜானகி, பிரபு, பிரபுவின் 2வது மனைவி சண்முகவள்ளி, கார் ஓட்டுநர் ஆகாஷ் மற்றும் குழந்தையை வாங்கி விற்பனை செய்த உறையூரைச் சேர்ந்த புரோக்கர் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விற்கப்பட்ட குழந்தையை மீட்பதற்கு டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தை டெல்லியில் உள்ள புரோக்கர் ஒருவர் மூலம் விற்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில், பிரெட்ரிக், பாண்டியராஜன், அபுதாகீர் மற்றும் செயல் அரசு ஆகிய 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார், டெல்லிக்குச் சென்று கடந்த ஒரு வாரக் காலமாக முகாமிட்டு இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து குழந்தையை வாங்கி விற்ற டெல்லியைச் சேர்ந்த புரோக்கர் கோபி என்கிற கோபிநாத்தைக் காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை 5 லட்சம் ரூபாய்க்குக் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் விற்கப்பட்டது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து கோபியை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய தனிப்படை காவல் துறையினர், நீதிமன்ற அனுமதியுடன் கோபியை அழைத்துக் கொண்டு கர்நாடகாவுக்குச் சென்றுள்ளனர்.
கர்நாடக மாநிலம் வெள்ளக்கவி மாவட்டம் உத்யம்பாக் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஜன்னம்மா நகரைச் சேர்ந்த பாக்கிய ஸ்ரீ என்ற பெண்ணிடம் குழந்தை இருப்பது தெரிய வந்தது. பின்னர் பாக்யஸ்ரீயிடம் நடத்திய விசாரணையில், அவருக்குக் குழந்தை இல்லாததும், இதனால் டெல்லியில் சிகிச்சை பெற்றபோது, அவரை அணுகிய புரோக்கர் கோபி 5 லட்சம் ரூபாய்க்குக் குழந்தையை விற்றதும் தெரிய வந்தது.
அப்போது குழந்தைக்குரிய பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட பல ஆவணங்களையும் கோபி பாக்யஸ்ரீயிடம் கொடுத்துள்ளார். இதனால் பாக்யஸ்ரீ முறைப்படி குழந்தையை வாங்கியுள்ளார் என்பது தனிப்படை காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கோபி, பாக்யஸ்ரீ ஆகியோருடன் காவல் துறையினர் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து, இதுதொடர்பான கூடுதல் விசாரணையை மேற்கொள்ள உள்ளனர். மேலும் இந்த குழந்தையை மீட்பதற்காகத் தனிப்படை போலீசார் சுமார் 6,000 கிலோ மீட்டர் பயணம் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:திண்டுக்கல்லில் பயங்கரம் - வளர்ப்பு நாயை நாய் எனக் கூறியதால் விவசாயி படுகொலை!