தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! - Trichy news

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலின் சித்திரை தேர்த் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

By

Published : Apr 9, 2023, 7:28 PM IST

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலின் சித்திரை தேர்த் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்சி: சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த் திருவிழா இன்று (ஏப்ரல் 9) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி இன்று காலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பட்டு, கொடி மரம் முன்பு எழுந்து அருளினார்.

இதனையடுத்து காலை 7.40 மணிக்கு கோயிலின் பிரகாரத்தில் உள்ள கொடி மரத்தில் சிவாச்சாரியர்களைக் கொண்டு வேத மந்திரங்கள் முழங்க, அஸ்திர தேவர்களுக்கும், தங்கக் கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோயிலின் குருக்கள் சமயபுரம் மாரியம்மன் படம் தாங்கிய கொடியினை மந்திரங்கள், மேள தாளங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து இரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து காட்சி அளிக்கிறார்.

இதேபோல் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை வலம் வருகிறார். அந்த வகையில் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், மரக்குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் கோயிலை வலம்‌ வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலிக்க உள்ளார்.

மேலும் வருகிற 17ஆம் தேதி அன்று அம்மன், வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வருகிற 18ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. இதனையடுத்து அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் அம்மன் தேரில் எழுந்து அருளுகிறார். அதனைத் தொடர்ந்து திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மேலும் வருகிற 19ஆம் தேதி அம்மன் வெள்ளி‌ காமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். தொடர்ந்து 20‌ஆம் தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 21ஆம் தேதி மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்த மண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. இதனையடுத்து 25ஆம் தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடு ஆகிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

தேரோட்டம் விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்க வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் சமயபுரம் கோயிலின் தேரோட்ட விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு வருகிற 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் திருவிழாவை முன்னிட்டு காவல் துறையினர் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்!

ABOUT THE AUTHOR

...view details