தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், நிர்வாக நியமனங்களில் ஜனநாயக முறை இல்லாமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்தாகவும் குற்றஞ்சாட்டி அச்சங்கத்திலிருந்து விலகி புதிய அணியை நிர்வாகிகள் உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஸ்ரீதர் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”தற்பொழுது உதயம் ஆகியுள்ள உள்ள புதிய அணிக்கு ஒருங்கிணைப்பாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். தமிழகத்திலுள்ள 12 ஆயிரம் பள்ளிகளின் தாளாளர்கள் இதில் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக சங்கத்தின் வரவு- செலவு கணக்கு முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை. தன்னிச்சையாக மாநில நிர்வாகிகளை தலைவர் நியமனம் செய்துள்ளார்.