திருச்சி:திருவெறும்பூர் அருகேவுள்ள என்ஐடி (National Institute of Technology) கல்லூரியில் மாநில அளவில் மட்டுமல்லாமல் அகில இந்திய அளவிலும், சர்வதேச அளவிலுமான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பயின்று வரும் மாணவ மாணவிகள் என்ஐடி கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலம், காக்கிநாடா பான்குடியைச் சேர்ந்த அவளா செளமியா தேவி (20) என்ற மாணவி கல்லூரி விடுதியில் தங்கி பி.டெக். சிவில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர் தடகள வீராங்கனை என்று கூறப்படுகிறது.
அவருடன் திருவாரூரைச் சேர்ந்த தீட்சனா என்ற சக மாணவி ஒருவரும் தங்கி கல்வி பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று (ஏப்.14) கல்லூரி விடுமுறை என்பதால் தீட்சனா வெளியில் சென்றுள்ளார். அவளா செளமியா தேவி மட்டுமே விடுதி அறையில் இருந்துள்ளார். பின்னர், வெளியில் சென்ற தீட்சனா, இரவு விடுதிக்கு வந்து பார்த்தபோது அறையின் கதவு உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்தது. கதவைத் தட்டியும், சத்தம் கொடுத்துப் பார்த்தும் திறக்காததால் கொஞ்சம் பலமாக ஓங்கி உதைத்துள்ளார். அப்போது கதவு திறந்துள்ளது.