திருச்சி: ஶ்ரீரங்கம் தொகுதி முத்தரச்சநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ராதா(70). இவரது கணவர் வேலாயுதம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், ராதாவிற்கு ரஜினி(42) என்ற மகன் உள்ளார். இந்நிலையில், வீட்டில் ராதா மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.
இதனிடையே, வீட்டிலிருந்த ராதாவிற்கு மகன் ரஜினி வெளியே இருந்துகொண்டு செல்போனில் தொடர்புகொண்டு பேச முயன்றார். ஆனால், நீண்ட நேரமாக போனை ராதா எடுக்காத காரணத்தால் சந்தேகமடைந்த ரஜினி பக்கத்து வீட்டில் வசிக்கும் நபரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதையடுத்து, பக்கத்து வீட்டில் இருந்த நபர் ராதா வீட்டிற்கு சென்று பூட்டி இருந்த கதவைத் தட்டியுள்ளார்.
ஆனால், நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் உடனடியாக ரஜினிக்கு போன் செய்து தங்களுடைய அம்மா கதவை திறக்கவில்லை என்று கூறினார். இதையடுத்து பதறிப்போன ரஜினி, வீட்டை திறந்து பார்த்தபோது, வீட்டுக்குள் ராதா கழுத்து, காது அறுபட்டு உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரஜினி, நடந்தவை குறித்து உடனடியாக ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து ஜீயபுரம் டிஎஸ்பி பாரதிதாசன், காவல் ஆய்வாளார் பாலாஜி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி நடத்தினர்.
உடலைக் கைப்பற்றிய போலீசார், திருச்சி திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பினர். மேலும், ராதா எப்படி இறந்தார்? எனக் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை வீட்டில் ரஜினி உள்ளிட்ட யாரும் இல்லாததைத் தெரிந்துகொண்ட மர்ம ஆசாமிகள் யாரோ? ராதா வீட்டுக்குள் புகுந்து அவரை கொலை செய்துவிட்டு கழுத்தில் அணிந்திருந்த தோடு, வளையல் உள்ளிட்ட 4 பவுன் நகையைத் திருடிக் கொண்டு சென்றது தெரியவந்தது.
மேலும், ராதா வீட்டுக்கு நேற்று யார் வந்தது? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் முத்தரச்சநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு - பதறவைக்கும் சிசிடிவி காட்சி